நன்றி குங்குமம் ஆன்மிகம்
1 – எண்ணின் சிறப்பு
எண் என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று எண்ணிக்கை. (Numbers, count) இரண்டாவது பொருள் நினைத்தல். (Think) மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கை விரல்களை எண்ண எப்பொழுது கற்றுக்கொண்டானோ, அன்றே, `எண்’ என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோற்றம் ஆகும். எண்ணு – கணக்கிடுகை (Calculation, computation. என்று சீவக சிந்தாமணி உரை குறிப்பிடுகிறது.) எழுதப்பழகும் குழந்தைகள் முதலில் எளிதாக எழுதும் எண், ஒன்று ஆகும். எண் என்பதற்கு மற்றொரு பொருள் எண்ணம். எண்ணி இருத்தல். (thought, thinking)
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
– என்பது குறட்பா.
இதில் “எண் சேர்ந்த நெஞ்சம்” என்பதற்கு சிந்திக்கும் ஆற்றலும், நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் என்று பொருள் காணலாம்.
“எண்ணில் நல்ல வண்ணம்
வாழலாம்” என்பது தேவாரம்.
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”- ஔவையார்.
இந்த எண்களின் பெருமையைக் குறித்துச் சிந்தித்தால் எத்தனைச் செய்திகள்? நமது வாழ்க்கையில் பெரும் பகுதி, எண்களில்தான் பிணைந்து கிடக்கிறது. ஒருவர் எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதற்கு விடை, எண்ணில் வரும்.
ஒருவருக்கு எத்தனை பிள்ளைகள்? என்ற கேள்விக்கு விடை எண்ணில் வரும்.
ஒருவன் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்? விடை எண்ணில் வரும்.
ஒருவருடைய வயது என்ன? விடை எண்ணில் வரும்.
ஒருவன் எப்போது பிறந்தான்? விடை எண்களில் வரும்.
எனவே எண்களில்தான் நமது வாழ்க்கை இருக்கிறது. அதில் எண் ஒன்று (1) பற்றி சற்று எண்ணுவோம்.
ஒன்று என்பது முதல் எண். அடிப்படை எண். மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஒருவருடைய வயது ஒன்றாம் வயதிலிருந்து தொடங்குகிறது. எனவே, இது தொடக்க எண்.
இதிலிருந்துதான் மற்ற எண்கள் இரண்டு, மூன்று, நான்கு என்று போகின்றன. நிலை தரும் எண் என்றும் சொல்லலாம். காரணம், இந்த எண்ணோடு எதைப் பெருக்கினாலும், வகுத்தாலும் பெருக்கப்படும் அல்லது வகுக்கப்படும் எண்ணின் அளவு மாறுவதில்லை.
உதாரணமாக, மூன்று என்ற எண்ணுடன் 1-ஐப் பெருக்கினால், மூன்றுதான் வரும். 3 என்ற எண்ணுடன் 1-ஐ வகுத்தால், 3 தான் வரும். நான்கு என்ற எண்ணோடு 1-ஐப் பெருக்கினால் நான்குதான் வரும். நான்கு என்ற எண்ணோடு 1-ஐ வகுத்தாலும், நான்குதான் வரும். ஒருவர் மற்றவருடன் சேர்ந்தால் பலம் அதிகரிப்பதுபோல், எண் ஒன்று மற்றயெண்களுடன் சேர்கையில் சேரப் பெற்ற எண்ணின் மதிப்பு அதிகரிக்கிறது. இவையெல்லாம் கணித முறையில் எண் ஒன்றின் சிறப்புகள். இப்பொழுது ஆன்மீகத்துக்கு வருவோம். ஒன்று என்ற எண்ணைப் பற்றி கவியரசு கண்ணதாசன் ஒரு அழகான பாடல் எழுதினார்.
1. உலகம் ஒன்று. தெய்வம் ஒன்று என்று ஒரு பாடல் எழுதினார்.
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று.
நன்றே நன்று நல்லதைச் செய்து
ஒன்றாய் வாழ்வது நன்று.
2. வேதம் “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந: தத்ர ப்ரஹ்மா சதுர்முகோஜாயத…லலாடாத் தர்யக்ஷ: ஸூலபாணி: புருஷோஜாயத” என்று ஒருவன் நாராயண – அவன் பரம்பொருள் என்று பேசுகிறது. “ஒன்றும் தேவும்” என்கிறார் நம்மாழ்வார்.
‘‘தேருங்கால் தேவன் ஒருவனே என்றுஉரைப்பர்
ஆரும்அறியார் அவன்பெருமை
ஓரும் பொருள்முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்’’
என்பது திருமழிசை ஆழ்வார் வாக்கு.
ஆறுகள் எத்தனை இருந்தாலும், அது சென்று கலக்கும் இடம் கடல். அந்த கடல் அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம், பசிபிக் கடல் என்று பல பெயர்களில் இருந்தாலும், உலகம் சுற்றி ஒரு கடல்தானே! இறைவனுக்கு பெரும்புற கடல் என்று திருநாமம் உண்டு (திருக்கண்ணமங்கை பெருமாள்)
3. சைவ மதத்தில், சிவபெருமானை ஒன்றானவன் என்று போற்றுகிறார்கள்.
4. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பது குறள்.
எழுத்துக்களில் (அ) அகரம் முதலாவது போல, இறைவன் உலகுக்கு முதல் ஆனவன் என்று இதன் பொருள், எண்களின் தொடக்கமாக ஒன்று (1) இருப்பதைப் போல, எழுத்துக்களின் தொடக்கமாக ‘அ’ இருக்கிறது. உலகத்தின் தொடக்கமாக இறைவன் இருக்கிறான். ஆனால், தமிழில் எழுதும் பொழுது ஒன்று (1) என்ற இலக்கத்துக்கு ‘‘அ’’ என்று எழுதுவது இல்லை. ‘‘க’’ என்று எழுதுகிறார்களே, என்ன காரணம் என்று கேட்கலாம். எழுத்துக்களில் உயிர் எழுத்துக்களின் முதல் எழுத்து ‘‘அ’’ மெய்யெழுத்துக் களின் முதல் எழுத்து ‘‘க்’’. உயிர் எழுத்தும் (அ) மெய் எழுத்தும் (க்) சேர்ந்தால் உயிர்மெய் எழுத்து (க) வரும். உயிரும் மெய்யும் சேர்ந்தவராக இறைவன் இருக்கிறான். அவனே முதலாவதாக இருக்கிறான் என்பதற்காகதான் ‘‘க’’ என்கிற எழுத்து சொல்லப்படுகிறது.
பிரளய காலத்தில், எல்லாம் ஒடுங்கிய நிலையில், உலகத்தில் எந்த உயிரும் இல்லாத பொழுது, `அ’ என்கிற உயிராக இறைவன் இருப்பான். ஆனால், உலகம் படைக்கப்பட்ட பிறகு, உலகம் உயிர் இரண்டிலும் கலந்து அவன், `க’ என்கிற எழுத்தாக இருக்கின்றான். இதை நம்மாழ்வார் பாசுரம் மிக அற்புதமாகக் காட்டுகிறது.
கர விசும்பு எரிவழி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி அளிபொறையாய் நின்ற
பரனடி மேல் குருகுர் சடகோபன் சொல்
நிரனிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே
ஆக, இறைவன் ஒன்றே என்ற கருத்தை வெளிப்படுத்த உதவுவது எண் 1.
5. ஆதியை (தொடக்கத்தை) உணர்த்துவதும், ஏகாந்தத்தை உணர்த்துவதும் எண் ஒன்று ஆகும்.
6. சீர்காழியில் திருமங்கையாழ்வாரிடம் ஞானசம்பந்தர் ஒரு குறள் பாடுக என்று கேட்கிறார். “ஒரு (1)” என்று கேட்டதால், ஒன்று என்கிற எண்ணை அடிப்படையாக வைத்துக்கொண்டு பாடலைத் தொடங்குகின்றார் திருமங்கை ஆழ்வார். இறைவனுடைய ஆதி ஒன்று என்பது போல, எண்களின் ஆதி ஒன்று (1) என்பதை மனதில் சிந்தித்து, எண்ணலங்காரத்தில் இந்த பாடல் அமைந்திருக்கிறது.
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்
தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மின் நீரே
7. ஆழ்வார்கள் அருளிச் செயலில் பார்த்து விட்டோம். தேவாரத்தில் பார்க்க வேண்டாமா? திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை திருக்குறுந்தொகையில் ஒன்று என்கின்ற எண்ணை வைத்துக் கொண்டு அருமையாக பாடுகிறார்.
ஒன்று வெண்பிறைக்கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமையோடு முடுத்தது
ஒன்று வெண்டலையேந்தியெம் முள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.
8. திருநாவுக்கரசருக்கு ஒன்று என்ற எண் மிகவும் பிடிக்கும். திங்களூரில் அப்பூதியடிகள் மகனைப் பாம்பு கடித்து விடுகிறது. அவன் இறந்துவிட, அவனை மீட்பதற்காக ஒரு பதிகம் பாடுகிறார். அதைத் தொடங்கும்போது ஒன்று என்ற எண்ணில்தான் தொடங்குகிறார். காரணம், ஓர் இறைவன். அவன் ஈசன். ஓர் உயிர் அது அப்பூதியடிகள் மகனுடைய உயிர். இந்த ஒன்றினைத் தர அந்த ஒன்றினால்தான் முடியும்.
9. இறைவன் ஒன்றே என்ற கருத்தை வெளிப்படுத்த உதவுவது எண் 1. அந்த இறைவனுக்கு முன் நாம் அனைவரும் ஒன்றே என்ற சமத்துவக் கருத்தை வலியுறுத்துவதும் எண் ஒன்றே.
10. கணவன் – மனைவி பேதமில்லாமல் இணைவதே வாழ்க்கை எனும் தத்துவத்தை உணர்த்த சிவன் உமையுடன் சேர்ந்து உமாமஹேஷ்வர கோலத்தில் ஒன்றாய் இருக்கிறார்.
11. ஹரி – ஹரன் என்று ஓர் உருவாய் காட்சியளித்ததனாலும் ஒன்றிற்குப் பெருமை. அதனால், சிவ விஷ்ணு வடிவம் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் என திருநாமமிட்டனர்.
12. ஆன்மீகமாக இருக்கட்டும், வாழ்வியலாக இருக்கட்டும். இலக்கு (aim, goal) என்பது ஒன்றை நோக்கியதாக இருக்க வேண்டும். இரண்டு குதிரையில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது என்பார்கள். ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பார்கள். ‘‘ஒருவனைப் பற்றி ஓரிடத்தில் இரு’’ என்று சொல்வதும் உண்டு.
13. வேதங்கள் நான்கு என்றாலும் ஒன்றுதான். அதை வியாசர் நான்காகப் பிரித்துத் தொகுத்தார். சமய தத்துவங்கள் மூன்றினுள் ஆதிசங்கரர் பரப்பிய தத்துவம் அத்வைத தத்துவம். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். இரண்டற்ற நிலை என்பது ஒன்றுதானே. அது ஒன்றின் பெருமைதானே.
14. வைணவம், விசிஷ்டாத்வைதம். அதுவும் ஒன்று பற்றித்தான் கூறுகிறது. வேதங்களின் சுருக்கம் திருமந்திரம். அதன் சுருக்கம் பிரணவம். அது ஒற்றெழுத்து. ஒன்றைக் குறிப்பது. இந்த பிரணவத்தை சுருக்கினால் அது உகார, மகாரமாகி, அகாரத்தில் போய் ஒடுங்கும். அந்த அகாரம்தான் ஈஸ்வர தத்துவம். எம்பெருமான் என்பது ஒன்றுதானே.
15. ஆழ்வார்கள் என்று பொதுவாகச் சொன்னால், அது நம்மாழ்வாரை மட்டுமே குறிக்கும். அப்படியானால் மற்ற ஆழ்வார்கள் எப்படிக் குறிப்பிடப்படுவார்கள் என்று சொன்னால், நம்மாழ்வாரின் அங்கங்களாகக் குறிப்பிடும் வைணவ மரபு உண்டு. நம்மாழ்வாரை அவயவி. மற்ற ஆழ்வார்களை அங்கங்களாக உடையவர்.
16. ஆன்மாக்களின் இறுதிநிலை மோட்சம்தான். அந்த மோட்சம் என்பது ஒன்றுதான். ஏகதேசம் என்பார்கள்.
17. சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் என்பார்கள். ஒற்றுமை என்பது ஒன்றைத் தான் குறிக்கும். எல்லோரும் ஒன்றாக இருப்பதுதான் (United) ஒற்றுமை. இங்கேயும் ஒன்றின் பெருமை பேசப்படுகிறது. அந்த ஒன்று என்பது சமூக அமைதிக்கு உரிய எண்ணாக இருக்கிறது.
18. உலகில்கூட நாம் என்ன சொல்லுகின்றோம். எதிலும் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று தானே சொல்லுகின்றோம்.
19. நம்முடைய பாரததேசத்தை வர்ணிக்கும் பாரதி,
முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”
என்று அன்றைய பாரதத்தின் மக்கள் தொகையான முப்பது கோடியைக் குறிப்பிட்டு, (இன்று 132 கோடி) முகம் முப்பது கோடி என்றும் உயிர் ஒன்று என்றும், செப்பு மொழி பதினெட்டு ஆயினும் சிந்தனை ஒன்று என்றும், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி பாரதி பாடியுள்ளார்.
இந்த பாரத தேசத்தின் பெருமையை ஒன்று என்ற எண்ணோடு இணைத்துச் சொல்லுகின்ற வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. இதை ஒரு அழகான பாடலாக 42 வருடங்களுக்கு முன் சென்னை வானொலியில் எழுதினேன். அதன்
பல்லவி இப்படி ஆரம்பிக்கும்.
மலர்கள் பலவும் சேர்ந்து ஒரு
மாலை ஆவது போல
இனங்கள் பலவும் சேர்ந்த
எங்கள் இந்தியத் தாயகம் ஒன்றே
20. கண்கள் இரண்டு. ஆனால், காட்சி ஒன்று. செவிகள் இரண்டு. ஆனால், ஒலி ஒன்று. எண்ணங்கள் பலப் பல. ஆனால், இதயம் ஒன்று. இவை எல்லாம் ஒன்றின் பெருமையைச் சொல்பவை.
21. எண் கணித சாஸ்திரத்தில் ஆங்கில எழுத்து “A’’-க்கு ஒன்று என்ற எண் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒன்று என்பது சூரியனைக் குறிக்கும். நவகிரகங்களில் சுய ஒளி உள்ளது சூரியன்தான். அதனால், அதற்கு எண் 1 கொடுத்தார்கள். ஒன்றில் இருந்து மற்ற எண்கள் கிளைத்து விரிவாவதைப் போல, அந்த சூரியனிலிருந்துதான் மற்ற கிரகங்கள் ஒளி பெறுகின்றன.
அது தலைமைக் கிரகம். தலைமை (Head) என்றாலே ஒன்றுதான். அதன் ஒளி கொண்டுதான் மற்ற கிரகங்கள் வலிமை பெறுகின்றன.22. ஒன்று என்ற வார்த்தையின் வேர்ச்சொல் “ஒல்கு”. அதுவே பின்னர் சற்று மருவி “ஒன்று” என்றானது. “ஒல்கு” என்ற வார்த்தைதான் “உல்கு” என்றாகி, பின்பு “உலகம்” என்றானது. ஆக, “ஒன்று”, “உலகம்” என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் வேர்ச்சொல் “ஒல்கு” என்ற சொல்.
23. வாழ்க்கை முழுவதும் நம்மைப் பின் தொடர்கிறது ஒன்று. சங்ககாலத்தில் இருந்தே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தமிழர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டது. ராமாயணம் இதைத்தானே வலியுறுத்துகிறது. ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என்பதுதானே ராமாயணம். அது ஒன்றின் பெருமைதானே.
24. தமிழ் மொழியின் பெருமைகளில் ஒன்று அதில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள். உதாரணத்துக்கு சில வார்த்தைகளையும், அதன் அர்த்தத்தையும் பார்க்கலாம்.
ஐ – நுட்பம், அழகு.
ஓ – சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.
க – நெருப்பு, கடவுள்
கா – சோலை.
கு – பூமி.
கூ – கூப்பிடு.
கௌ – ‘கௌவு’ என்று ஏவுதல்.
சே – சிவப்பு.
சோ – மதில்.
து – உண் என்னும் ஏவல்.
நூ – எள்.
நே – நேசம்.
நை – நைதல்.
நொ – மென்மை.
நௌ – மரக்கலம், கப்பல்.
பே – அச்சம்.
மே – மேன்மை.
மோ – மொள்ளுதல்.
வீ – பறவை.
இப்படி ஒன்றின் பெருமையைப் பற்றி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்து இரண்டு என்ற எண்ணின் பெருமையைப் பார்ப்போம்.
தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்
The post ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று appeared first on Dinakaran.