ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் ரப்பரால் அமைக்கப்பட்ட வேகத்தடை சேதம்: அகற்றி விட்டு தார் சாலை அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் 3 பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ரப்பரால் அமைக்கப்பட்ட வேகத்தடை சேதமடைந்துள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பேரூராட்சியில் அனந்தேரி, போந்தவாக்கம், பென்னலூர்பேட்டை, சீத்தஞ்சேரி என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பலர், பைக், கார் போன்ற வாகனங்களில் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்வார்கள். அவ்வாறு வரும்போது ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் சென்னை-திருப்பதி சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க நான்கு முனை சந்திப்பு பகுதிகளில் வேகத்தடை அமைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை, சென்னை சாலை ஆகிய 3 சாலைகளில் ரப்பரால் ஆன வேகத்தடை அமைத்தனர் . சத்திய வேடு சாலையில் வேகத்தடை அமைக்கவில்லை. மேலும் சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை கனரக வாகனங்களால் சேதமடைந்து பெயர்ந்து விட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகில் உள்ள 4 முனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க காவல் துறை சார்பில் ரப்பரால் ஆன வேகத்தடை 3 இடங்களில் அமைத்தனர்.

இந்த வேகத்தடை கனரக வாகனங்களால் சேதமடைந்து விட்டதா அல்லது யாரேனும் இரவு நேரத்தில் பெயர்த்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. மேலும் சத்தியவேடு சாலையில் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ரப்பரால் ஆன வேகத்தடையை அமைப்பதற்கு பதிலாக தார் சாலை அமைக்கும் உதிரிகள் மூலம் வேகத்தடை அமைக்க வேண்டும்’ என்றனர்.

The post ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் ரப்பரால் அமைக்கப்பட்ட வேகத்தடை சேதம்: அகற்றி விட்டு தார் சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: