ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய ஆசாமி: வலைத்தளங்களில் வீடியோ வைரல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட ஆசாமியை இளம்பெண் தனது செல்போனில் பதிவு செய்து போலீசில் புகார் அளித்தார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செறுபுழா-தளிப்பரம்பு இடையே நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் தளிப்பரம்பு செல்வதற்காக செறுபுழா பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அந்த பஸ்சில் ஒரு இளம்பெண் ஏறி இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு அருகே உள்ள இருக்கையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்தார். இந்த நிலையில் திடீரென அந்த நபர் தன்னுடைய பேன்ட் ஜிப்பை அவிழ்த்து இளம்பெண் முன் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த நபரின் ஆபாச நடவடிக்கையை உடனடியாக தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசாமி, எங்கே தன்னை மாட்டிவிட்டு பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிகொடுத்துவிடுவாரோ என நினைத்து உடனடியாக பஸ்சிலிருந்து இறங்கி ஓடி விட்டார். இது குறித்து இளம்பெண் செறுபுழா போலீசில் செல்போனில் படம்பிடித்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட ஆசாமியை செல்போனில் பதிவான வீடியோ காட்சியை அடிப்படையாக கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த இளம்பெண், தான் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த காட்சி வைரலாக பரவி வரும் நிலையில், பெண்ணிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட ஆசாமியை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

The post ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய ஆசாமி: வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: