மக்கள்குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க ஆட்டோவில் மண்ணெண்ணை கேனுடன் வந்த குடும்பத்தினர்

 

திருச்சி, மே 30: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மற்றும் குடும்பத்தினர்ஆட்டோவில் மண்ணெ்ணை கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்ட மண்ணெண்ணையை போலீசார் பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ அபிராமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். குறைதீர்நாள் கூட்டத்தில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் அளித்த மனுவில், ‘திருச்சி, ரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

திருவானைக்காவல், திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த துரைராஜ் (42), இவரது மனைவி அம்பிகா (38), இவர்களது மகள்கள் மவுலிகா, பூஜா, மகன் மணிகண்டன் மற்றும் துரைராஜின் சகோதரி மேனகா ஆகியோர் மனு அளிப்பதற்காக ஆட்டோவில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது குறைதீர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு பின்புறம் நீண்ட நேரமாக அனைவரும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். இதை கவனித்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். அப்போது தங்களது வீட்டை அப்பகுதியில் உள்ள அவர்களது உறவினர் ஒருவர் அபகரித்துக் கொண்டு, இடித்து விட்டதாகவும் அதுதொடர்பாக மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்ததால், போலீசார் அவர்கள் வந்த ஆட்டோவை பரிசோதித்ததில், அவர்கள் மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணை கேன் இருப்பதை கண்டறிந்து கைப்பற்றினர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து, மனு அளிக்க அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.

திருவெறும்பூர் தாலுகா, பழங்கனாங்குடி சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த (மாதா கோவில் தெரு) ஆரோக்கியமேரி (83) என்பவர் தனது தங்கை அமலோற்பவமேரி (80)யுடன் வந்து மனு அளித்தனர்.

இதுகுறித்து ஆரோக்கியமேரி கூறியதாவது:
பழங்கனாங்குடியை பூர்வீகமாக கொண்ட நான், திருமணமான பின் துவாக்குடியில் கணவர் அடைக்கலத்துடன் வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் நாங்கள் இருவரும் எனது சொந்த ஊரான பழங்கனாங்குடிக்கு குடிவந்தோம். ஊரில் நடக்கும் விஷேசங்களில் எங்கள் குடும்பம் பங்கெடுத்து வந்தது. இந்நிலையில், எங்கள் மகள் திருமணத்தை வெளியூரில் நடத்தியதாக கூறி, ஊர் முக்கியஸ்தர்கள் எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர். மேலும் கோவில் திருவிழாவின்போது எனது வீட்டருகே சப்பரத்தை நிறுத்துவதில்லை. எனது கணவர் அடைக்கலம் இறந்தபின், நானும் எனது தங்கையும் வசித்து வருகிறோம்.

தண்ணீர் பிடிக்கச் சென்றால், காத்திருந்து நீண்ட நேரம் கழித்து தண்ணீர் பிடிக்கிறோம். மேலும் கடைகளுக்கு பொருள் வாங்கச் சென்றால் எங்களை புறக்கணிக்கின்றனர். இதனால் வெளியூருக்கு சென்று தேவையான மளிகை சாமான்களை வாங்கி வருகிறோம். மேலும் சவேரியார் கோவில் திருவிழாவின் போது, கோவில் சப்பரத்தை எங்கள் வீட்டருகே நிறுத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை திருவெறும்பூர் தாசில்தார், பழங்கனாங்குடி விஏஓ நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத்தவறிய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்’ என்றார்.

The post மக்கள்குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க ஆட்டோவில் மண்ணெண்ணை கேனுடன் வந்த குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: