தகாத உறவை கண்டித்த தந்தையை எரித்து கொன்ற இளம்பெண் அடித்துக் கொலை: சித்தப்பா உட்பட 2 பேர் சரண்

மண்டபம்: தந்தையை எரித்து கொலை செய்த இளம்பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது சித்தப்பா உட்பட 2 பேர் போலீசில் சரணடைந்தனர். ராமநாதபுரம் அருகே காவனூர் ஆசாரி மடத்தைச் சேர்ந்த ரவி மகள் பவித்ரா (26). திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். பவித்ராவின் கணவர் கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்தார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் வசித்த பவித்ரா, இடையர் வலசையைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை தந்தை ரவி கண்டித்தார்.

இதுதொடர்பான தகராறில் ரவியை, மனைவி பாக்கியம், மகள் பவித்ரா சேர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றனர். இக்கொலை வழக்கில் சிறை சென்ற பாக்கியம், பவித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் ஒருவருடன் பவித்ரா நெருங்கி பழகினார். அந்நபர் பவித்ரா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். பவித்ராவின் இப்பழக்கம் அவரது சித்தப்பா குடும்பத்தார் மற்றும் உறவினர்களை கோபமடையச் செய்தது. இதற்கிடையே ஆசாரி மடம் வீட்டு வாசல் முன் பவித்ரா நேற்று முன்தினம் நின்றிருந்தார்.

அப்போது பவித்ராவின் சித்தப்பா முருகேசன்(45), இவரது மகன் மணிகண்டன்(23), 18 வயதான ஒருவர் என 3 பேர் டூவீலரில் வந்தனர். அவர்கள் பவித்ராவை கண்டித்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மணிகண்டன், இரும்பு கம்பியால், பவித்ராவின் தலையில் அடித்து கொன்றார். தப்பி ஓட முயன்ற மணிகண்டனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். முருகேசன், 18 வயது வாலிபரை தேடி வந்தனர். இருவரும் நேற்று உச்சிப்புளி போலீசில் சரணடைந்தனர். அவர்களை ராமநாதபுரம் பஜார் போலீசார் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவை கண்டித்த தந்தையை எரித்து கொன்ற இளம்பெண் அடித்துக் கொலை: சித்தப்பா உட்பட 2 பேர் சரண் appeared first on Dinakaran.

Related Stories: