புண்படுத்தும் மனிதர்களை பண்படுத்தும் திருக்குறள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

உயர்ந்த கருத்துக்களை பல்வேறு வகைகளில் எடுத்துச் சொல்லி மனித மனத்தைப் பண்படுத்துகிறது திருக்குறள். தம் அறம் சார்ந்த எண்ணங்களை வலியுறுத்த எண்ணற்ற உவமைகளைப் பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். உடலில் தோன்றும் புண் கூட அவர் கவனத்திலிருந்து தப்பவில்லை. அதையும் உவமையாகப் பயன்படுத்துகிறார். உடல்காயம் இருக்கட்டும். தங்கள் நாவால் மனக்காயம் ஏற்படுத்துகிறார்களே சிலர்? உடல் காயம் ஆறிவிடும். ஆனால், சொல்லால் விளைந்த மனக்காயம் ஆறவே ஆறாது என்கிறார். சொற்களால் புண்படுத்தும் மனிதர்களைப் பண்படுத்தும் குறள் இதோ:

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
(குறள் எண் 129)

தீயினால் சுட்ட புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். ஆனால், நாவினால் கடிந்து கூறப்பட்ட சொற்களால் ஏற்பட்ட புண் நெஞ்சில் ஒருநாளும் ஆறுவதில்லை.

உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
(குறள் எண் 257)

இறைச்சி என்பது இன்னோர் உடம்பின் புண். எனவே அறிந்தவர் இறைச்சியை உண்ணக்கூடாது.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்.
(குறள் எண் 393)

கல்வி கற்றவரே கண்ணுடையவர் என்று கூறத்தக்கவர். கல்லாதவர் தங்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்றே
கருதப்படுவர்.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
(குறள் எண் 776)

ஒரு வீரன் தன் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கும்போது போரில் மார்பில் புண் படாத நாட்களைப் பயனில்லாமல் கழித்த நாட்களாகவே கருதுவான். பழந்
தமிழகத்தில் போரில் விழுப்புண் பெறுதல் உயர்வாகக் கருதப்பட்டது. விழுமிய புண் என்பதே விழுப்புண் என்பதன் விளக்கம். விழுமிய என்றால் மிக உயர்ந்த எனப் பொருள். புறமுதுகு காட்டி ஓடாது எதிரியின் நேரே நின்று போர்செய்து எதிரியின் வாள், வேல் போன்ற ஆயுதங்கள் மார்பைத் தாக்க அதனால் மார்பில் புண் ஏற்படுமானால் அதுவே விழுப்புண் எனப் போற்றப் பட்டது. அவ்விதமில்லாமல் புறமுதுகு காட்டி அச்சத்தோடு ஓடி எதிரியின் ஆயுதம் முதுகில் தாக்கி காயம் ஏற்படுமானால் அந்தப் புண் புறப்புண் என்று சொல்லப்பட்டது. அது இழிந்தது.

பெருஞ்சேரலாதன் என்ற அரசனும் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானும் ‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். அப்போது கரிகால் வளவன் ஆவேசத்தோடு எறிந்த வேல், பெருஞ்சேரலாதனின் மார்பைத் தாக்கித் துளைத்து அதன் முனை முதுகின் வழியே ஊடுருவி விட்டது. மார்பில் பெற்றது விழுப்புண்தான். பெருமைக்குரியதுதான்.

ஆனாலும், அது முதுகிலும் புண் ஏற்படுத்தி விட்டதே? அதை இழிவு என்று கருதியது பெருஞ்சேரலாதன் உள்ளம். அதனால் ‘வடக்கிருத்தல்’ என்ற முறைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தான்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்!

என்கிறாரே வள்ளுவர்? பெருஞ்சேரலாதன் தன் முதுகில் ஏற்பட்ட புண்ணை மானப் பிரச்னையாகக் கருதி உயிர் விட்டுவிட்டான். ‘நடந்த போரில் வெற்றி பெற்ற கரிகாலனின் வீரத்தைக் காட்டிலும் மார்பை ஊடுருவிய வேலால் முதுகில் புண் ஏற்பட்டதற்கு நாணி வடக்கிருந்து உயிர் துறந்த பெருஞ்சேரலாதனின் வீரமே பெருவீரம்’ என பெருஞ்சேரலாதன்மேல் வேல் எறிந்த கரிகாலனைப் பார்த்தே கவிதை பாடினார் ஒரு பெண்பாற்புலவர். துணிச்சல் மிகுந்த அந்தப் பெண்பாற் புலவரின் பெயர் வெண்ணிக் குயத்தியார்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே!
(புறநானூறு 66)

தன் இளம் வயது மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பிவிட்டு அவன் வருகைக்காகக் காத்திருந்தாள் ஒரு முதிய தாய். அவளிடம் ‘போர்க்களத்தில் உன் மகன் புறமுதுகு காட்டி ஓடி முதுகில் புண்பட்டு இறந்துவிட்டான்’ என்று தவறாகச் சேதி சொன்னார்கள் சிலர். ‘அப்படியானால் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பகங்களை வாளால் வெட்டிக் களைவேன்’ எனச் சூளுரைத்துவிட்டு, கையில் வாளோடு போர்க்களம் போனாள் அந்தத் தாய்.

போர்க்களத்தில் கீழே கிடந்த சடலங்களைப் புரட்டிப் புரட்டித் தேடினாள். அந்தச் சடலங்களின் இடையே தன் மகன் சடலத்தையும் பார்த்தாள். அவன் புறமுதுகிட்டு ஓடி முதுகில் புண் பெற்று இறக்கவில்லை. கடுமையாகப் போரிட்டு மார்பில் விழுப்புண் பெற்று வீரமரணம் அடைந்திருக்கிறான் என்பதை அறிந்தாள்.மகனை ஈன்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விடக் கூடுதலான மகிழ்ச்சியை அப்போது அடைந்தாள். அவள் எனப் பாடுகிறார் காக்கை பாடினியார் நச்செள்ளையார். மார்பில் விழுப்புண் பெற்று

இறத்தல் பெரும் கெளரவமாகக்
கருதப்பட்ட காலம் சங்ககாலம்.
‘நரம்பு எழுந்து உலறிய திறம்பட மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்

பணஅழித்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட
முலை அறுத்திடுவென் யான் எனச் சினை இ
கொண்ட வாளொடு படுபியம் பெயரா

செங்களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய
படுமகன் கிடக்ககை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே’
(புறநானூறு 278)
என்கிறது அந்தப் பாடல்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்!

என்கிறாரே வள்ளுவர்? சான்றோன் என்ற சொல்லில் மகனின் வீரப் பண்பும் அடங்கும் எனக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய பாடலால் புரிந்துகொள்ள முடிகிறது. `புண்’ என்ற சொல்லுக்கு இணையாகக் காயம் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம்.

‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே!’

என்பது சொக்கநாதப் புலவர் எழுதிய அழகிய நேரிசை வெண்பா.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் பாடல் ஒரு மளிகைக் கடைக்காரரின் கூற்றுப்போல் தென்படும். ‘வெங்காயம் சுக்காகக் காய்ந்துவிட்ட பிறகு வெறும் வெந்தயத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வணிகம் செய்வது? வீணாகாத நல்ல சீரகம் கொடுப்பீர்கள் என்றால் பெருங்காயத்தை நான் ஏன் தேடப்போகிறேன்? சீரகத்தை விற்றுப் பிழைத்துக் கொள்வேன் ஏரகத்துச் செட்டியாரே!’ என்பது மேலோட்டமான பொருள்.

ஆனால், இந்த வெண்பாவின் உட்பொருள் பக்தியும் தத்துவமும் சார்ந்தது. ஏரகத்துச் செட்டியார் என திருவேரகத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானை அழைக்கிறார் புலவர். ‘வெம்மையான இந்த உடல் வற்றிக் காய்ந்துவிட்ட பிறகு இந்த உடலைச் சுமந்து வாழ்வதால் என்ன பயன்? சீர் நிறைந்த உன் திருவடிகளை எனக்குத் தந்தால் இந்த உடலைப் பற்றி நான் சிந்திக்கவே மாட்டேன்!’ என்பது புலவரின் கூற்று.ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் ‘ஆடாது அசங்காது வா!’ என்ற பாடலில் கண்ணனின் நடன அழகில் யாருடைய கண்திருஷ்டி தோஷமாவது படுமானால் தன் மனம் புண்படும் என எழுதுகிறார்.

குழல் ஆடிவரும் அழகா! உனைக்
காணவரும் அடியார் எவராயினும்
கனக மணியசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே!

என்ற வரிகளில் புலப்படும் அவர் பக்திமனம் நம்மைப் பரவசம் கொள்ள வைக்கிறது.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்!’

என எழுதினார் வள்ளுவர். காதலியின் பாதத்தில் மிக மென்மையான அனிச்ச மலரும் அதுபோலவே மென்மையான அன்னப் பறவையின் இறகும் பட்டால்கூட நெருஞ்சி முள்போல் குத்தும் என்பது முற்காலக் கவிஞர் வள்ளுவரின் கற்பனை. காதலி நடந்தால் அதைப் பார்த்து காதலன் உள்ளம் புண்ணாகும் என்பது தற்காலக் கவிஞர் வாலியின் கற்பனை.

“பணம் படைத்தவன்’’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதி டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கும் புகழ்பெற்ற பாடல் ‘பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்’ என்ற பாடல். அதில் வரும் வரிகள் இவை:

பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்!
காலடித் தாமரை நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்!

“தில்லானா மோகனாம்பாள்’’ திரைப் படத்தில் நாதஸ்வரக் கலைஞரான சிவாஜி கணேச சண்முக சுந்தரத்தைப் பார்த்து, ‘நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?’ என நடனமாடியவாறே விசாரிப்பார் பத்மினி மோகனாம்பாள். காதலன் நாதஸ்வரக் கலைஞன் கரத்தில் புண் ஏற்பட்டிருப்பது காதலி மோகனாம்பாளின் உள்ளத்தைப் புண்ணாக்குகிறது. அந்தச் சூழலுக்குத் தகுந்தாற்போல் எழுதப்பட்ட கண்ணதாசவரிகள் கேட்பவர் உள்ளங்களை உருக்குகின்றன:

கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்தப்
பெண்பட்ட பாட்டை யாரறிவார்?

சபரிமலை செல்லும் அன்பர்கள் பலர், ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்று பாடியவாறே செருப்பில்லாத காலோடு நடக்கிறார்கள். காலில் புண் ஏற்படுவதைப் பற்றி அவர்கள் கவலைகொள்வதில்லை. அந்தப் புண்ணுக்கு ஐயப்பன்மேல் அவர்கள் கொண்ட பக்தியே அருமருந்தாக அமை கிறது. பல ஆலயங்களில் தீமிதித் திருவிழாக்கள் நடைபெறுவதைப் பார்க்கிறோம்.

பக்தர்கள் நெருப்புக் கங்குகளின் மீது வெறும் காலோடு சரசரவென்று ஓடுவதையும் பார்க்கிறோம். அவர்கள் நெஞ்சில் சுடர்வீசும் பக்தி நெருப்பு, காலின் கீழ் உள்ள நெருப்பை வென்றுவிடுகிறது. பாதங்களில் ஏற்படக்கூடிய தீப்புண்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.‘கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’ எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. முகத்தில் புண் ஏற்பட்டால் அதைக் கண்ணாடியில்தான் பார்க்க முடியுமே அல்லாது அவரவரும் பார்த்துக்கொள்ள இயலாது. ஆனால், கையில் புண் ஏற்பட்டால் அவரவரே பார்த்துக்கொள்ளலாம், அதற்குக் கண்ணாடி தேவையில்லை.

ஆராயாமலே தெளிவாகப் புலப்படக் கூடியவற்றைத் தெரிவிக்கும்போது ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’ என்ற பழமொழி பயன்படுத்தப் படுகிறது. பிணி, மூப்பு, சாக்காடு என்ற மூன்றும் வாழ்வில் இயல்பானவை. தவிர்க்க இயலாதவை என்கிறார் மகான் புத்தர். இந்த மூன்றில் பிணியும் சாவும் இல்லாத மனிதர் இல்லை. நடுவில் சொல்லப்படும் மூப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. முதுமையைக் காணாமலே மரிப்போர் உண்டு. உடலே ஒரு பிணிதான். அதனால்தான் உடல் காயம் எனப்படுகிறது. உடல் என்கிற புண்ணில் வரும் காயம், இன்னொரு வகைப் புண். அவ்வளவே. மகாபாரதத்தில் தர்மபுத்திரரை யட்சன் கேள்வி கேட்கும்போது, இந்த உலகில் மாறாத அதிசயம் எது எனக் கேட்கிறான்.

தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மரிப்பதைத் தொடர்ந்து பார்த்தாலும், தான் நிரந்தரம் என்பதுபோல் மனிதன் நினைத்துக் கொள்கிறானே, அதைவிட அதிசயம் வேறில்லை என்கிறார் தர்மபுத்திரர்.இந்த நிலையில்லாத வாழ்வில் நிலைத்த நிம்மதி வேண்டுமானால், அதற்குத் தேவையான அறநெறிக் கருத்துக்களை அள்ளி அள்ளி வழங்குகிறது வள்ளுவரின் திருக்குறள். அது படிப்பதற்குரிய நூல் மட்டுமல்ல, பின்பற்று வதற்குரிய நூல் என்பதை உணர்ந்தால் போதும். நிம்மதி கிட்டும்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post புண்படுத்தும் மனிதர்களை பண்படுத்தும் திருக்குறள்! appeared first on Dinakaran.

Related Stories: