கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசார் மீது கல்வீச்சு; எஸ்ஐ படுகாயம்; ஒருவர் கைது: 12 பேருக்கு வலை

தர்மபுரி: தர்மபுரி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கல்லை வீசி தாக்கியதில் எஸ்ஐ படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கல்லை வீசியவரை கைது செய்த போலீசார் மேலும் 12 பேரை தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சீரியனஅள்ளியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகள் நதியா (19). அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி கல்லூரிக்கு சென்ற நதியா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதே நாளில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயஅரசு (24) என்பவரும் மாயமானார். இதுபற்றி தனித்தனியே மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், இருவரும் காதலித்து வந்ததும், சம்பவத்தன்று இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இருவரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், படித்து முடித்த பின்னர் திருமணம் செய்துகொள்வோம் என நதியாவும், விஜயஅரசும் எழுதிக்கொடுத்து விட்டுச்சென்றனர். இந்நிலையில் காதலனை பிரிந்த வேதனையில் இருந்த நதியா கடந்த 26ம்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மாரண்டஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நதியாவின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே காதலனிடம் இருந்து நதியாவை போலீசார் பிரித்து அனுப்பியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, போலீசார் மீது குற்றம்சாட்டி கடந்த 27ம் தேதி மாலை உறவினர்கள் பெல்ரம்பட்டி-பாலக்கோடு சாலையில் கற்கள், கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மாரண்டஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பன்னீர்செல்வம்(49) என்பவர் போலீசார் மீது ஆவேசமாக கல்லை தூக்கி வீசினார். இதில் எஸ்ஐ ஜீவானந்தம் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பன்னீர்செல்வம், சுதன் (48), சக்திவேல் (22),சிதம்பரம் (28), சண்முகம் (35), முத்துவேல் (27), அருள் (28), ஆறுமுகம் (47), ராஜேந்திரன் (21), அமுதா (25), தெய்வானை (35), கணேசன் (40), முனுசாமி (30) ஆகிய 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசார் மீது கல்வீச்சு; எஸ்ஐ படுகாயம்; ஒருவர் கைது: 12 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: