டெல்லியில் செயல்படும் பாக். தூதரக பள்ளி மூடல்: நிதி நெருக்கடியால் திடீர் முடிவு

புதுடெல்லி: கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரக பள்ளியை அந்நாடு மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் ஒன்று செயல்படுகிறது. தற்போது அந்த பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த கல்வியாண்டு முதல் பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நடப்பு கல்வியாண்டு முடிந்ததும் பாகிஸ்தான் தூதரக பள்ளி மூடப்படும். குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே தூதரகத்தில் பணியாற்றுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். இதுகுறித்து பாகிஸ்தான் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், ‘டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு இஸ்லாமாபாத்தில் இருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. கடந்த ஒரு வருடமாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தியா மட்டுமின்றி, மற்ற நாடுகளில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகங்களுக்கும் இதே நிலைமை தான்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post டெல்லியில் செயல்படும் பாக். தூதரக பள்ளி மூடல்: நிதி நெருக்கடியால் திடீர் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: