பிஎச்டி மாணவியிடம் சீண்டல்; பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்கு: உத்தர பிரதேச போலீஸ் நடவடிக்கை

ஆக்ரா: பிஎச்டி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் செயல்படும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்கும் 29 வயதுடைய மாணவி ஒருவர், அலிகார் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘பிஎச்டி பட்டத்துக்காக கடந்த ஐந்து வருடங்களாக கடுமையாக படித்து வருகிறேன். அதற்காக எனது மேற்பார்வையாளரிடம் திருப்திகரமான கருத்துகளைப் பெற்றேன். பின்னர் எனது பிஎச்டிக்கான வரைவு ஆய்வறிக்கையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சமர்ப்பித்தேன்.

ஆனால் எனது ஆய்வறிக்கைக்கான மதிப்பெண்ணைத் தரவில்லை என்று எனது மேற்பார்வையாளர் (55 வயது பேராசிரியர்) வாய்மொழியாக தெரிவித்தார். மேலும் அவர் எனது வரைவு ஆய்வறிக்கையில் கையெழுத்திட மாட்டேன் என்றார். என்னால் முடிந்தவரை அவரை சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால் என்னை அவர் மிரட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் என்னிடம் பாலியல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தார். ஆனால் நான் உடன்படவில்லை. அதற்கான என்னை தகாத முறையில் தொடவும் அல்லது அருவருப்பான பாலியல் கருத்துகளையும் கூறினார். நான் அணியும் ஆடைகள், உதட்டுச்சாயம், எனது உடலைப் பார்த்து புகழ்ந்து பேசுவார்.

துறை அலுவலகத்தில் அவர் தனியாக இருக்கும் போது, என்னை அழைத்தார். நான் அங்கு செல்லவில்லை. அதனால் எனது பிஎச்டி படிப்புக்கான மதிப்பெண்ணை வழங்காமல் பழிவாங்கி வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இவரது புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது, ஐபிசி பிரிவு 354-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரிதா திவேதி கூறினார். மேலும் இதுகுறித்து பல்கலைக்கழக துறை தலைவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக்கழகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post பிஎச்டி மாணவியிடம் சீண்டல்; பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்கு: உத்தர பிரதேச போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: