வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி நகை கடையில் 2 கிலோ தங்கத்தை அள்ளிச்சென்ற பலே கொள்ளையர்கள்: சினிமா பாணியில் துணிகரம்

திருமலை: தமிழில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டை காண்பித்து பணம், நகை கொள்ளையடிப்பார்கள். இதேபோன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ரிவன் மதுகர்பவார். இவர் தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் மோண்டா மார்க்கெட்டில் நகை கடையை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிவன்மதுகர்பவார் தனது சொந்த ஊருக்கு சென்றார். இதையடுத்து, ​​அவரது மைத்துனரான விகாஸ் கடையை கவனித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி 5 பேர் கடைக்கு வந்துள்ளனர். அடையாள அட்டைகளை காண்பித்து கடை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக விகாஸ் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது. 2 பேர் விசாரணை என்ற பெயரில் விவரங்களை சேகரித்தனர். மற்ற 3 பேரும் தங்கத்தை சோதனை செய்ய வேண்டும் என கூறி பைகளில் போட்டுக்கொண்டனர். தொடர்ந்து பையில் எடுத்து வைக்கப்பட்ட 2 கிலோ தங்கத்திற்கு வரி செலுத்தவில்லை.

அதனால், பறிமுதல் செய்கிறோம் என்று நம்ப வைத்து உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் கொடுக்காமல் தப்பிச்சென்றனர். இந்த விஷயத்தை அருகே இருந்த கடைக்காரர்களிடம் விகாஸ் சொன்னபோது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தால், நோட்டீஸ் கொடுப்பார்கள் என்றனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விகாஸ் மோண்டா மார்க்கெட் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான தகவல்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 தனிப்படைகள் அமைத்து இந்த கும்பலை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் ரமேஷ் கூறுகையில், ‘ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெறு வருகிறது. புதிதாக வருபவர்கள் அதிகாரிகள் போல் நடித்து கடைகளுக்குள் நுழைந்தால் கடைக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.

The post வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி நகை கடையில் 2 கிலோ தங்கத்தை அள்ளிச்சென்ற பலே கொள்ளையர்கள்: சினிமா பாணியில் துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: