நாட்டுக்கோழி வளர்ப்பில் லாபம் பார்க்கும் இளைஞர்

கிராமப்புற விவசாயம் என்பது பல பயிர் சாகுபடியில் தொடங்கி தென்னை, மா, வாழை என தோட்ட விவசாயம் வரையிலானது. ஒரு கட்டத்தில் விவசாயம் என்றாலே கிராமம் தான் என்றபடி ஆகிவிட்டது. அதேபோல, இன்றைய இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய அக்கறை இல்லை என்ற பொதுப்புத்தி தன்மையும் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தையும் இல்லை எனச் சொல்லும் வகையில் தீபக் எனும் இளைஞர் தனது வீட்டின் மாடியில் நாட்டுக்கோழி வளர்க்க ஆரம்பித்து பண்ணைத் தொழிலில் முதன்மையாக இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள அண்ணனூரில் தனது வீட்டின் மொட்டை மாடியில் நாட்டுக் கோழிகளுக்கு கொத்தமல்லி, காய்கறிகளை நறுக்கி தீவனமாக வழங்கிக்கொண்டிருந்த இளைஞர் தீபக்கை சந்தித்து பேசினோம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிதான் எனக்கு சொந்த ஊர். படிச்சது சென்னைலதான். பட்டப்படிப்பு முடிச்சுட்டு குறும்படங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். அப்போதான் சன் டிவில துணை நடிகரா நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது. தோட்டப்பண்ணை விவசாயத்திலும், பண்ணைத் தொழிலிலும் அதிக ஈர்ப்பு இருந்ததால மொட்டை மாடியில் மணத்தக்காளி, அரைக்கீரை, வெண்டை, கத்திரி போன்ற காய்கறி வகைகளை தொட்டியில் வைத்து வளர்த்தேன். கூடவே நாட்டுக்கோழியும் வளர்த்தேன். கோழிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மொட்டைமாடி தோட்டத்தை என்னால் பராமரிக்க முடியல. அதனால இப்ப முழுக்க முழுக்க கோழி வளர்ப்பில் இறங்கிட்டேன் என்கிறார் தீபக்.

ஒரு தொழில் துவங்குவதற்கு அதை பற்றிய அக்கறை மட்டும் இருந்தா போதாது. அதை எப்படி செயல்படுத்தணும் என்கிற ஆலோசனையும் அவசியம். அதனால, கோழிப்பண்ணை வளர்ப்பை பற்றி முறையாக தெரிந்துகொள்ள மாதவரத்தில் உள்ள கோழிப்பண்ணை ஆராய்ச்சி நிலையத்தில் கோழி வளர்ப்பு பயிற்சியில் கலந்துகிட்டு கோழி வளர்ப்பு பற்றிய தெளிவான முறையை தெரிஞ்சிக்கிட்டேன்.

பிறகு, மாதவரம் கோழிப்பண்ணையில 30 நாட்டுக்கோழிகளை விலைக்கு வாங்கினேன். அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க, நாட்டுக்கோழி முட்டைகளை விலைக்கு கேட்டாங்க. அதன்மூலமாக ஒரு தொகை வருமானம் கிடைத்தது. அதுக்கு பிறகு இதை ஒரு தொழிலாவே செய்யலாமேன்னு முடிவு எடுத்தேன். இன்னைக்கு அதுவே எனக்கு ஒரு நிலையான வருமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துருக்கு.கோழி வளர்ப்பை பொறுத்தவரை பண்ணையை சுத்தமா வச்சுக்கணும். அதனால காலை, மாலை என இரண்டு வேளையுமே பண்ணையை பராமரிப்பேன். வேலை விசயமாகவோ படப்பிடிப்பிற்காகவோ வெளியே செல்லும்போது என் அப்பாதான் கோழிகளைப் பாத்துக்கிறாங்க என்ற தீபக் தொடர்ந்து பேசினார்.

மொட்டை மாடில 600 சதுரஅடி இடத்தில ஷெட் அமைச்சி அதுல கோழிகளை வளர்க்கிறேன். பகலில் மேய்ச்சல் முறையில் இருக்கிற கோழிகள ராத்திரி மட்டும்தான் ஷெட்டுக்குள் அடைப்போம். மருத்துவ குணமுள்ள கடக்நாத், சிறு விடைக்கோழிகளையும் வளர்க்கிறேன். சராசரியா 100 கோழிகள் எப்பவும் இருக்கும். இப்போ 15 சேவல், 90 க்கும் மேல பெட்டைக்கோழிகள் இருக்கு. அதுல சில கோழிகள் முட்டை
யிடுது. தினமும் 40 முட்டை கிடைக்கும். அதுல பாதிப்பகுதி முட்டைகளை வித்திடுவேன். மீதி முட்டைகள குஞ்சுபொரிக்க வச்சிடுவேன். அந்த முட்டைகளை இன்குபேட்டர்ல வச்சி பொரிக்க வைப்போம். மாதத்திற்கு சராசரியா 200 குஞ்சுகள் வரை பொரிக்குது.

கோழிகளுக்கு முதன்மையான தீவனமே அரிசி, கம்பு, சோளம், கோதுமைத்தவிடு, அசோலா, வெங்காயத்தோல் இவையெல்லாம்தான். பக்கத்தில இருக்கிற மளிகைக்கடைகள்ல இருந்து காய்கறி கழிவுகளை எடுத்திட்டு வந்து அதையும் தீவனமா கொடுக்கிறேன். தினமும் இரண்டு வேளை தண்ணி வெச்சுடுவோம். கோழிகளுக்கு நோய் வராம தடுக்க வாரம் ரெண்டு தடவை ஆற வச்ச சுடுதண்ணில கொஞ்சம் மஞ்சள் கலந்து வைப்போம். இந்த தண்ணிய கோழிகள் குடிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதன்மூலமா கோழிகளுக்கு வரும் சளி, காய்ச்சலில் இருந்து பாதுகாக்கலாம். அதேபோல கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயிலிருந்து பாதுக்காக்க வாரம் ஒருமுறை வெத்தலை, மஞ்சள், சின்னவெங்காயம், குப்பைமேனி தழை, கீழாநெல்லி, மிளகு ஆகியவற்றை அரைச்சி தீவனத்தோடு சேர்த்து கொடுப்போம். மாடியில் 2.5 அடி தடுப்புச்சுவர் மேல 3 அடி உயரத்துக்கு நிழல்வலை அமைச்சிருக்கோம். இது வெயில்ல இருந்து கோழிகளை பாதுகாக்குது. கோழிகள வெளியில போகாம தடுக்கும் அரணாவும் இருக்குது. மொட்டைமாடியில கழிவுநீர் தங்காம பார்த்துக்குவோம். கோழிகளோட கழிவுகள எடுத்து செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்துறோம்.

கோழிகளுக்கான பராமரிப்புச் செலவு, மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாய்தான் ஆகுது. ஒரு கடக்நாத் கோழி வருசத்துக்கு 100 லிருந்து 120 முட்டை வரை இடும். ஒரு முட்டை 30 ரூபாய்னு விலை வச்சி விக்கிறோம். 80 முட்டை கிடைக்குதுனு வச்சா கூட வருசத்துக்கு 2400 ரூபா வருமானமா கிடைக்குது. வருசத்துல எப்படியும் 8 கோழிகள் முட்டையிடும். இதன் மூலமா வருசத்துக்கு 19200 ரூபா கிடைக்குது. இங்க இருக்குற நாட்டுக்கோழிகள் மூலமா தினமும் 40 முட்டைகள் கிடைக்குது. ஒரு நாளைக்கு 20 முட்டைகளை வித்துடுவோம். ஒரு முட்டை 20 ரூபான்னு வாங்கிக்கிறாங்க. இதன்மூலமா ஒரு நாளைக்கு 400 ரூபா கிடைக்குது. மாசத்துக்கு 12 ஆயிரம் கிடைக்குது. சிலர் இங்க வந்து கோழி களையும் வாங்கிட்டு போறாங்க. இதனாலயும் ஒரு வருமானம் கிடைக்குது. எல்லா செலவும் போக மாசம் சராசரியா 20,000 ரூபாய்க்கு அதிகமா லாபம் கிடைக்குது. கோழி வளர்ப்புத்தொழில ஒரு பொழுதுபோக்கா செய்யலாம். இத வீட்டுல இருந்துகிட்டே செய்யலாம். அதிக அலைச்சல், பராமரிப்பு வேலை இருக்காது, என கூறும் தீபக், அடுத்ததாக பொன்னேரியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பதற்கான வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கோழி குஞ்சு பொரிச்ச 7 வது நாளில் எப்ஒன் மருந்தை கண்கள்லயும், மூக்கிலயும் போடுவோம். 14 வது நாள்ல ஐபீடி என்ற மருந்தை அதே மாதிரி போடுவோம். 21வது நாள்ல லசோட்டா என்ற மருந்தை தண்ணில கலந்து கொடுக்கிறோம். இது அம்மைநோய் வராம தடுக்கும். இது தவிர கல்லீரல் பாதிப்படையாம இருக்க லிவர் டானிக், அமோக்சிலின் தர்றோம்.

The post நாட்டுக்கோழி வளர்ப்பில் லாபம் பார்க்கும் இளைஞர் appeared first on Dinakaran.

Related Stories: