கடன் உச்சவரம்பை உயர்த்த ஒப்புதல் நெருக்கடியிலிருந்து மீண்ட அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்த ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளிடையே ஒப்புதல் ஏற்பட்டுள்ளதால் நெருக்கடி நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே கடன் வாங்கியே அரசாங்கத்தை நடத்துகின்றன. எவ்வளவு கடன் வாங்கப்படுகிறது, அது எதற்காக செலவழிக்கப்படுகிறது என்பது அந்தந்த நாடுகளின் தேவைகளை பொறுத்து வேறுபடுகிறது. அமெரிக்காவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் அமெரிக்காவில் கடன் வாங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ல் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு இந்திய ரூபாய் மதிப்பில் 2,574.8 லட்சம் கோடியாக இருந்தது. இந்த உச்சவரம்பை 2023 ஜனவரி மாதத்திலேயே எட்டி விட்டதால், பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து விரைவான நடவடிக்கைகள் மூலம் ஜுன் 1ம் தேதிக்குள் கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும், இல்லையெனில், அமெரிக்கா கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்காவை பொறுத்தவரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒப்புதலுடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவது சாதாரண நடைமுறை என்றாலும் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தராமல் அரசியல் செய்து வருவது வழக்கமான ஒன்று. கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து தற்போதும் கடந்த சில தினங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சி தலைவர் கெவின் மெக்கர்த்தி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஒருசில விஷயங்கள் தவிர மற்ற விஷயங்களில் இருதரப்பினருக்கும் இடையே கடன் உச்சவரம்பை உயர்த்துவதில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா சந்திக்க இருந்த பெரும் பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.

The post கடன் உச்சவரம்பை உயர்த்த ஒப்புதல் நெருக்கடியிலிருந்து மீண்ட அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: