செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம்; அந்த புனிதமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திறப்பு விழா 2 கட்டங்களாக நடைபெற்றது.புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா, வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். இந்திய வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். புதிய நாடாளுமன்றம் பழமையும் புதுமையும் ஒருங்கிணைந்து உருவாகியுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளின் எண்ணங்களை புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்.

நமது விருப்பத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கக்கூடியதாக புதிய நாடாளுமன்றம் இருக்கும். நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் விருப்பம் தெரிவித்தனர்.

இந்தியா இன்று புதிய பயணத்தை தொடங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மரியாதையுடன் உற்று நோக்குகிறது. செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம். அந்த புனிதமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் நீதி, நேர்மை, நல்லாட்சி அடையாளமாக விளங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

செங்கோல் நம் அனைவருக்கும் என்றும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதன் மூலம் அதன் புகழ் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் மாறியதன் அடையாளமான செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்துள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல ஜனநாயகத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது

வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும், அவ்வாறு அதிகரிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டடம் தேவைப்படுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பது காலத்தின் தேவையாகும்.

விடுதலைக்கு பிறகு பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த இந்தியா, தற்போது சுதந்திர பொற்காலத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி நமது பெருமை பலவற்றை அபகரித்தது; தற்போது காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. நாடாளுமன்ற புதிய கட்டடம் நாடு முழுவதிலும் உள்ள கலைகள் அனைத்தையும் தன்னகத்தில் கொண்டுள்ளது.

ஊராட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரை நமது லட்சியமாக இருப்பது நாட்டின் வளர்ச்சியும் மக்கள் முன்னேற்றமுமே ஆகும். புதிய நாடாளுமன்றத்தை கட்டியது பெருமை; அதுபோலவே 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தந்ததும் திருப்தி தருகிறது. புதிய நாடாளுமன்றத்தின் வசதிகள் பற்றி பேசும்போது நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதை நினைவுகூர்கிறேன். நாடு முழுவதும் உள்ள கிராமங்களை நகரங்களுடன் இணைக்க 4 லட்சம் கி.மீ. நீள சாலைகளை நாம் அமைத்துள்ளோம் என பிரதமர் மோடி கூறினார்.

The post செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம்; அந்த புனிதமான செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: