அக்னி நட்சத்திர வெயில் நாளை விடைபெறுகிறது: மாஞ்சோலையில் கனமழை

நெல்லை: கோடையின் உச்சமான அக்னி நட்சத்திர கத்திரி வெயிலின் தாக்கம் நாளை (29ம் தேதி) நிறைவு பெறும் நிலையில், மாஞ்சோலையில் நேற்று மாலை கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏப்ரல் துவங்கியது முதலே அனலாய் வெயில் தகித்தது. கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம், கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில், அன்று முதல் சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் பெரிதாக இருக்கவில்லை. தொடர்ந்து வழக்கம்போல் கத்திரி வெயில் உச்சம்பெற்றது. நாளுக்கு நாள் வெப்ப பதிவு அதிகரித்ததால் பகல் மட்டுமின்றி இரவிலும் புழுக்கத்தால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.

நெல்லையில் நேற்று முன்தினம் 101 டிகிரி வெயில் அடித்தது. இந்த வெப்ப பதிவு, நேற்று மேலும் உயர்ந்து 101.5 டிகிரியானது. காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில், சாலையில் சென்றவர்கள் அனலால் அவதிப்பட்டனர். மாலை வேளையில் மாநகரின் புறநகர பகுதியான ராமையன்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதியில் வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன. மாலை 5 மணிக்கு பிறகு இப்பகுதியில் கனமழை காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக காற்று வீசத் துவங்கியதால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இந்நிலையில் நாளை(29ம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் நிலையில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அக்னி நட்சத்திர வெயில் நாளை விடைபெறுகிறது: மாஞ்சோலையில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: