சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆய்வுக்கு சென்ற தேசிய மருத்துவ ஆணையம் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை எனக்கூறி கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என கூறியுள்ளனர். இதற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னை டுமீங் குப்பத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச்செயலர் இறையன்பு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை வேலு, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், முதன்மைச் செயலாளர்கள் ககன்தீப் சிங் பேடி, அபூர்வா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்த ராவ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: ஏற்கனவே பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற பல்வேறு இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் நொச்சி நகர், நொச்சி குப்பம், டூமிங் குப்பம் போன்ற பல்வேறு கடற்கரைவாழ் மீனவர் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மிகச்சிறப்பான வகையில் 1779 மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. 968 தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும், 1.40 கோடி குடும்பங்கள் ஆண்டு ஒன்றிற்கு ரூ5 லட்சம் வீதம் பயன்பெற்று வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற வகையில் இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ22 லட்சம் அளவிற்கு பயன்பெற்று வருகிறார்கள்.
அதேபோல, திருச்சி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழமை வாய்ந்த மருத்துவமனைகளாகும். சிசிடிவி கேமராக்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறைகள் சொல்லியிருக்கிறார்கள். இந்த குறைகளையும், பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரிசெய்து கொடுத்துவிடுவோம். இருப்பினும், இதற்கு மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற செய்திகளை பெரிதாக வெளியிடுவது என்பது வருத்தத்திற்குரியது. நடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வருவதாலும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளில் பூதக் கண்ணாடி போட்டு குறை தேடுகிறார்கள். இச் செயல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
The post பூத கண்ணாடி போட்டு குறைகளை தேடுகின்றனர்; கேமரா இயங்கவில்லை என்பதற்காக மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்தா?.. தேசிய ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாய்ச்சல் appeared first on Dinakaran.