குடியாத்தத்தில் ரூ2,000 நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறி பாஸ்டர் வீட்டில் ரெய்டு நடத்த முயன்ற போலி ஐடி அதிகாரிகள்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கியை சேர்ந்தவர் நோவா(51). சர்ச் பாஸ்டராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்.
உரிய அனுமதி இல்லை எனக்கூறி வருவாய் துறை மற்றும் போலீசார் காப்பகத்தை மூடினர். தற்போது தனியாக அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களில், 10 பேர் சர்ச் வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அலுவலக ஊழியர்கள், சர்ச் பாஸ்டர் நோவா, அவரது மனைவி ஆகியோரிடம் செல்போன்களை பறித்துக்கொண்டு ‘நாங்கள் வருமானவரித்துறையில் இருந்து வருகிறோம். நீங்கள் அதிகளவில் ரூ2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் ரெய்டு நடத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். சந்தேகம் அடைந்த நோவா அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த கும்பலை சரமாரியாக தாக்கினர். உடனே கும்பல் காரில் ஏறி தப்பி ஓடியது. இதில் சிக்கிய ஒருவரை பிடித்து அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து குடியாத்தம் டவுன் போலீசார் வந்து விசாரித்தனர். இதில் சிக்கியவர், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்(38), பழைய கொலை குற்றவாளி என்பதும், சென்னை கூலிப்படையைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தப்பிய 9 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.

The post குடியாத்தத்தில் ரூ2,000 நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறி பாஸ்டர் வீட்டில் ரெய்டு நடத்த முயன்ற போலி ஐடி அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: