பட்டினியில்லா தேசம் படைப்போம்: இன்று உலக பட்டினி தினம்..!

 

* உலகளவில் 80 கோடி
* இந்தியாவில் 22 கோடி பேர் பட்டினி

‘ஏம்மா… பசிக்குது… 2 பீட்சா பர்கர், சிக்கன் பிரியாணி ஆர்டர் போடட்டுமா…’ என்று கூறிவிட்டு, வீட்டில் இருந்தபடியே செல்போனில் செயலியை தட்டி ஆர்டர் போட்டு சாப்பிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதே நேரம் ஒரு வேளை உணவுக்காக கடும் போராட்டம் நடத்தி, அதுவும் கிடைக்காமல் உயிரை விடுபவர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருவது வருத்தம் தரும் விஷயம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். ஆனால், இன்று உலகம் முழுவதும் சுமார் 80 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது. இந்தியாவில் சுமார் 22 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டினியோடு வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகில் வறுமை நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. ஆனால், அரசியல், பகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளாலும், வறட்சியான சூழலாலும், பல்வேறு நாடுகள் பட்டினியால் தவிக்கின்றன. பட்டினியில்லா நாடுகள் உருவாக வேண்டும்; அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச பட்டினி தினம். இந்த தினமானது கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏமன் முதலிடம்…: கடந்த 2014ல் உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏமன் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் உணவின்றி பரிதவிக்க தொடங்கினர். பட்டினிச்சாவுகள் அதிகரித்தன. போர் மூட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் காலரா, தட்டம்மை, போலியோ பாதிப்புகளை குழந்தைகள் சந்தித்தன.

ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரை துறக்கும் துயர நிலை ஏற்பட்டது. உணவு விலை அதிகரிப்பு, வாழ்வாதார பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாத நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் அந்த நாடு கடந்த 2022ம் ஆண்டு பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை பெற்றது. இந்தியாவின் நிலை… : சர்வதேச அளவில் நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு, பற்றாக்குறை, பட்டினி சூழலை மனதில் கொண்டு உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்படும். அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைடு, ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்பே நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்து இந்த பட்டியலை கடந்தாண்டு வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம், மொத்தம் 121 நாடுகள் மட்டுமே பங்கேற்றுள்ள இப்பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் இருந்தது. இது கடந்த 2021ம் ஆண்டை விட 6 இடங்கள் கூடுதல் என்பது வருந்தத்தக்கது. 14 நாடுகள் பின்னால் இருந்தாலும் கூட, இந்தியா கிட்டத்தட்ட கடைசி இடத்தை பிடித்தது போலத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். பாகிஸ்தானை விட…: இதில் கொடுமை என்னவென்றால் ஆசிய நாடுகளான இலங்கை 64, மியான்மர் 71, நேபாளம் 81, பாகிஸ்தான் 99வது இடங்களை பிடித்திருந்தன. பாகிஸ்தானை விட இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு, உணவு பற்றாக்குறை நிலவுவது வருந்தத்தக்கது. அதை விட கொடுமை பட்டினியில்லா தேசத்தை உருவாக்கியது போல ஒன்றிய பாஜ அரசு பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.பட்டினியில்லா தேசம் உருவாக வேண்டும். அதற்கான திட்டங்களை உலக நாட்டு தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். உலக அளவில் பட்டினிச்சாவுகள் குறைய வேண்டும். அதற்கான உறுதிமொழியை இன்று முதல் ஏற்போம்.

70 மில்லியன் டன் உணவு ஆண்டுதோறும் வீணடிப்பு
கடந்த 2021ல் ஐநா உணவுக்கழிவு குறியீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 மில்லியன் டன் உணவு வீணாகிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் சராசரியாக 50 கிலோ உணவை வீணாக்குவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது, உணவை வீணாக்குவோரில் இந்தியாவின் பங்கு 7 சதவீதம் ஆகும். சரி.. உணவுகள் எங்கெங்கு வீணாகின்றன. வீடுகளில் 60 சதவீதம், ஓட்டல்களில் 26 சதவீதம், சில்லறை விற்பனை கடைகளில் 14 சதவீதம் உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. பயன்படுத்தாமல் விட்ட உணவுகளை முறையாக சேகரித்தாலே பசியோடு இருக்கும் பல கோடி மக்கள் வயிறார சாப்பிடலாம்.

இன்று நீங்கள் உதவலாமே?
இன்று எத்தனையோ நாடுகள் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அந்நாட்டு மக்கள் உணவுக்கே போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. நம்மால் அனைவரின் பசியையும் போக்குவது சிரமம். முடிந்தளவு இன்றைய பட்டினி தினத்திலாவது, நம் வீட்டருகே, தெருவில், ஊரில் பசியோடு இருக்கும் ஒருவருக்கு ஒரு வேளை உணவாவது வழங்கலாமே…? செய்யலாமா?

உணவு பட்டினி குறியீடு: இந்தியாவுக்கு 107வது இடம்
கடந்தாண்டு வெளியான உணவு பட்டினி குறியீடு பட்டியலில் 121 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா இதில் 107வது இடத்தில் உள்ளது. சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் நிலைமை
இதை விட கவலைக்கிடம்.

The post பட்டினியில்லா தேசம் படைப்போம்: இன்று உலக பட்டினி தினம்..! appeared first on Dinakaran.

Related Stories: