தகவல் மையத்தில் பதிவு செய்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி ரூ17 லட்சம் நூதன மோசடி: துபாய் மாப்பிள்ளைக்கு போலீஸ் வலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 2வது திருமணம் செய்ய தகவல் மையத்தில் பதிவு செய்திருந்த பெண்ணை ஏமாற்றி, ரூ17 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (38). இவரது கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, 2வது திருமணம் செய்வதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த 13ம் தேதி, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை கிருஷ்ணகுமார் என்றும், துபாயில் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன், பூங்கோதையை தொடர்பு கொண்ட அந்த நபர், தான் திருமணத்திற்காக அதிகளவில் நகையை எடுத்து வந்ததால், டெல்லி விமான நிலையத்தில், கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்துவிட்டனர். அவற்றை மீட்க ரூ17 லட்சத்து 500 கட்டும்படி அதிகாரிகள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பூங்கோதை தன்னிடம் இருந்த பணம் மற்றும் தெரிந்தவர்களின் நகைகளை வாங்கி அடமானம் வைத்தும் ரூ17 லட்சத்து 500ஐ, கிருஷ்ணகுமார் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பின் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் பூங்கோதை புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post தகவல் மையத்தில் பதிவு செய்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி ரூ17 லட்சம் நூதன மோசடி: துபாய் மாப்பிள்ளைக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: