இந்த வார விசேஷங்கள்

ஆழ்வார் திருநகரி நவதிருப்பதி கருட சேவை
28.5.2023 – ஞாயிறு

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார்தான். இருந்த இடத்தில் இருந்தபடியே இருக்க, எல்லா திவ்ய தேசப் பெருமாளும் அவரிடம் வந்து தமிழ் பாசுரங்களைப் பெற்றதாகச் சொல்வார்கள். அவர் ஒரு புளிய மரத்தடியில் யோக நிலையில் 16 ஆண்டு காலம் இருந்தவர். வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை நம்மாழ்வாரிடம் தொடங்கி திருமங்கை ஆழ்வாரிடம் முடியும். “பராங்குச பரகாலர்கள்” என்று இந்த வரிசையைக் கூறுவது உண்டு. இருவருக்கும் திருநகரியோடு தொடர்பு உண்டு. ஆழ்வார் அவதாரத்தலம் ஆழ்வார் திருநகரி.

திருமங்கை ஆழ்வாரின் அவதார உற்சவம் கொண்டாடப்படும் தலம் திருவாலி திருநகரி. ஆழ்வார் திருநகரி திருக்குருகூர் என்றும் வழங்கப்படும். தாமிர பரணி கரையில் உள்ள திருத்தலம்.
இந்த தாமிரபரணி கரையை ஒட்டி வட கரையிலும் தென்கரையிலும் அடுத்தடுத்த திருத்தலங்களை ஒன்றாக நவதிருப்பதிகள் என்று அழைக்கும் மரபு உண்டு. ஆழ்வாரின் அவதார நட்சத்திரமானது வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகத்துக்கு ஒப்பான ஒரு திருநாள் இல்லை என்றார் மணவாள மாமுனிகள்.

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்?
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர்? – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு? தென்குருகைக்கு உண்டோ
ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?

ஆழ்வார் திருநகரியில், ஆழ்வார் அவதாரம் செய்த வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவமாக ஆழ்வார் திருநாள் நடைபெறுகிறது. இது மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
அந்த உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி துவங்கியது. இதன் முதல் நிகழ்வாக 22 ஆம் தேதி திங்கட்கிழமை திருமுளைச் சாற்று உற்சவம் நடைபெற்றது. கூரத்தாழ்வான் சந்நதியில் இருந்து தேங்காய் வாங்கி, மாலையில் தேங்காய் சாற்றுதல் என்ற உற்சவம் பிரசித்தம்.

அடுத்த நாள் மதுரகவியாழ்வார் உற்சவம். 24-ஆம் தேதி ஆழ்வார் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வாகன சேவை உலா நடைபெறும். இன்று (28.5.2023) பிரசித்தி பெற்ற கருடசேவை. இன்று காலை சுவாமி நம்மாழ்வார் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளுவார். நவதிருப்பதி எம்பெருமான்களுக்கு மதுரமான தமிழில் மங்களாசாசனம் நடைபெறும்.

இது பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று இரவு மதுரகவி ஆழ்வார் முன்செல்ல, ஸ்ரீநம்மாழ்வார் அம்ச வாகனத்தில் எழுந்தருள, 9 எம்பெருமான்களும் கருட வாகனத்தில் ஆரோகணித்த கருட சேவை உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த மங்களாசாசன உற்சவத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடியிருப்பார்கள். ததீயாராதனம், வைணவ மாநாடுகள், கருத்தரங்கங்கள், இசைக்கச்சேரிகள் என ஆழ்வார் திருநகரியே கோலாகலமாக இருக்கும். 1.6.2023 அன்று ஒன்பதாம் நாள் விழாவாக திருத்தேர் உற்சவம் நடைபெறும்.

அக்னி நட்சத்திரம் முடிவு
29.5.2023 – திங்கள்

இதுவரை சுட்டெரித்த கத்தரி என்னும் அக்னி நட்சத்திரம், இன்றோடு விடைபெறுகிறது. அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று சொல்லி சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பண்டைய நாளைய வழக்கம். இக்காலத்தில் அக்னிதோஷ நிவர்த்தி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. காலை சர்க்கரைப் பொங்கல் அல்லது கோதுமைப் பொங்கல் வைத்து, சூரிய நமஸ்காரம் செய்து அக்னிதோஷ நிவர்த்தியைச் செய்து கொள்ளலாம். இந்த அக்னிதோஷ காலத்திற்குப் பிறகு சுபகாரியங்களை நல்ல நாள் பார்த்து தாராளமாகச் செய்யலாம்.

பாப ஹர தசமி
30.5.2023 – செவ்வாய்

இன்று தசமி திதி. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இன்று மதியம் முதல் ஏகாதசி விரதம் இருப்பார்கள். இந்த தசமிக்கு பாபஹர தசமி என்று பெயர். பாவங்களைக் களைவது என்று இதன் பொருள். பாவங்களைக் களைந்த தசமி இந்த தசமி. காரணம் நினைத்தாலே பாபம் நீக்கும் இந்த நாளில் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் வடக்கே கங்கா தசரா என்று இந்த நாளைக் கொண்டாடுவார்கள். வைகாசி வளர்பிறையில் கங்கையில் நீராட பாவங்கள் எல்லாம் தீர்ந்து போகும். கங்கையில் நீராட எல்லோராலும் முடியுமா? அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா என்று கேட்கலாம்.

உங்கள் வீட்டிலேயே நீங்கள் நீராடுகின்ற நீரில் கங்கையை வரித்துக் கொண்டு, அதாவது கங்கையாக இந்த தண்ணீர் இருப்பதாக நினைத்துக் கொண்டு நீராட லாம். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள். நதி தேவதைகளை அழைக்கும் வகையில் ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு

அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங் களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். கங்கையினுடைய முழுமையான அனுகிரகத்தைப் பெறலாம். அப்பொழுது கங்கை சம்பந்தப்பட்ட சுலோகமோ கங்கா அஷ்டகமோ சொல்ல முடிந்தவர்கள் சொல்லலாம். குறைந்த பட்சம் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் நம சிவாயை நாராயண்யை தச
தோஷஹராயை கங்காயை சுவாஹா!

சிவபெருமானுடைய ஜடாமுடியில் வாசம் செய்து கொண்டு இருப்பவளே! அதே போல் நாராயணரின் பாதத்தையும் நீராடிக் கொண்டிருப்பவளே! அனைவரின் பாவங்களையும் போக்கக் கூடிய புண்ணியவளே! கங்கை தாயே! உம்மை வணங்குகிறோம்!! என்பதுதான் இம்மந்திரத்தின் அர்த்தம் ஆகும்.

மயூரநாதர் திருக்கல்யாணம்
30.5.2023 – செவ்வாய்

இன்று முருகனுக்கு உரிய செவ்வாய்க் கிழமை. மயில் மீது உலா வரும் முருகனுக்கு “மயூரநாதன்’’ என்ற திருநாமம் உண்டு. வைகாசி விசாகத்தை ஒட்டி எல்லா ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். வாடிப்பட்டி பரவையில் மயூர நாதர் திருக்கல்யாண விழா மிகச் சிறப்பாக 12 நாள் திருவிழாவாக நடைபெறும். மாப்பிள்ளை அழைப்பு, சீர்வரிசை என பக்தர்கள் பூமாலை பழத்தட்டுக்கள் ஏந்தி சீர் வரிசைகளுடன் மேள தாளம் முழங்க வருவார்கள்.

மண்டபத்தில் வள்ளி தேவ சேனாதிபதி முருகனுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமண உற்சவம் நடைபெறும். பெரும்பாலான முருகன் ஆலயங்களில் நடைபெறும் வைபவத்தில் கலந்து கொண்டு ஆன்மீக அனுபவமும் முருகனின் பேரருளும் பெறலாம்.

நிர்ஜல ஏகாதசி
31.5.2023 – புதன்

ஜலம் என்றால் தீர்த்தம். நிர் என்றால் இல்லை என்று அர்த்தம். வாயில் ஒரு சொட்டு தண்ணீர்கூட பருகாமல் இருக்கக்கூடிய ஏகாதசி விரதத்துக்கு நிர்ஜல ஏகாதசி என்று பெயர். ஆண்டு தோறும் ஜ்யேஷ்ட சுக்ல பக்‌ஷத்தில், அதாவது ஆனி மாதத்தில் வளர் பிறையில் வரக்கூடிய ஏகாதசியை நிர்ஜல ஏகாதசி என கடைப்பிடிக்கப்படுகிறது. சில முறை வைகாசியிலேயே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நிர்ஜல ஏகாதசி, பீம ஏகாதசி அல்லது பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விரதத்தை பாண்டவர்கள் ஐவரும் கடைப்பிடித்தனர். இந்த ஒரு ஏகாதசி விரதம் இருந்தாலே எல்லா ஏகாதசி பலனும் கிடைத்து விடுமாம்.

ஒரு வேளைகூட சாப்பிடாமல் இருக்க முடியாது என்று எண்ணிய பீமசேனனுக்கு ‘‘பீமா, மற்ற ஏகாதசி விரதம் இருக்க உன்னால் முடியாவிட்டால் இந்த ஒரு நாளாவது இரு’’ என்று வியாசர் சொல்லியதைக் கேட்டு இருந்ததால் பீம ஏகாதசி என்றும் சொல்வார்கள். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர் களைத்தேடி பகவான் வருகிறான். இன்று சொல்ல வேண்டிய பாசுரம்.

ஓயும் மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

அலர்ந்த திருவடித்தாமரைகளை வாக்குள்ளும் மனத்துள்ளும் வைப்பவர்களுக்கு பலவீனத்தைக் கொடுக்கும் வயோதிகம், பிறப்பு, இறப்பு, நோய்கள் ஆகியவை அழியும்படிச் செய்பவன் திருமலையிலே வாழும் கண்ணன் எம்பெருமான் என்பது இதன் பொருள்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

தன் திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்துகொண்ட ஸர்வேச் வரனை, உயர்ந்த சோலையையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் சொல்ல வல்லவர்கள் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று உலகம் புகழும்படி வாழ்வார்கள். என்பது இதன் பொருள். இந்த நிர்ஜல ஏகாதசி திதியில் தான்பிரம்ம தேவர் குபேரனைத் தோற்றுவித்தார் என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவின் ஆணைப்படி குபேரன் நிதிக்கு அதிபதி ஆனார்.

மகா பிரதோஷம்
1.6.2023 – வியாழன்

இன்று குருவாரம். சத்குருவாகிய சிவனை விரதம் இருந்து வணங்குவது சிறப்பு. மாதந்தோறும் இருமுறை – அதாவது வளர் பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி (13-ஆம் நாள்) பிரதோஷ தினங்களாகும். இந்த நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது அனைவரது நம்பிக்கை. ஜாதகத்தில் எந்த தசா புக்தி நடந்தாலும் பிரதோஷம் அன்று கோயிலுக்கு சென்று சிவனை வழிபடுவது சிறப்பு. ஏழரைச் சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். இதனால் கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். நன்மை அதிகரிக்கும்.

வைகாசி விசாகம்
2.6.2023 – வெள்ளி

விசாகம் என்பது எல்லா சமய தேவதைகளுக்கும் ஏற்ற தினம். சைவத்தில் முருகனுக்கும், வைணவத்தில் நம்மாழ்வாருக்கும் பிரதானமான தினம். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் இந்த வைகாசி விசாகத்தை ஒட்டி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே எல்லா முருகன் ஆலயங்களிலும் வைகாசி விசாகம் அன்று முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். அன்றைக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரங்களும் உண்டு. சுவாமி வீதி உலா உண்டு. இது தவிர வைகாசி விசாகத்தில் அவதரித்தவர் திருவாய் மொழி பிள்ளை என்கின்ற ஆசாரியர்.

இவர் வைணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சாரியரான மணவாள மாமுனிகளுக்கு குருவாக அமைந்தவர். திருமலையாழ்வார் என்ற திருநாமத்துடன் அவதரித்தார், அவருக்கு சைலேசர் மற்றும் சடகோப தாஸர் என்ற திருநாமமும் உண்டு. இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே நிலைத்தது. இவர் அவதார ஸ்தலம்: குந்தீநகரம் (கொந்தகை). பரமபதித்த இடம்: ஆழ்வார் திருநகரி. அவருடைய அவதார வைபவம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: