பழைய ஆய்வு மாளிகை கட்டிடம் இருக்கும் இடத்தில் முத்துப்பேட்டை புதிய தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும்-திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் வர்த்தக கழக நிர்வாகிகள் மனு

முத்துப்பேட்டை : பழைய ஆய்வு மாளிகை கட்டிடம் இருக்கும் இடத்தில் முத்துப்பேட்டை புதிய தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் வர்த்தக கழக நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பொதுபணித்துறை அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில் நூறாண்டுகளை கடந்த ஆய்வு மாளிகை (பயணிகள் விடுதி) இருந்த கட்டிடமும் உள்ளது.

இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக்காக வருகையில் இங்கு தங்கிச்செல்வதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு இதில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அதிலிருந்து காலி செய்து இங்கு தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடம்மாறி சென்று விட்டன.

இந்நிலையில் முன்பு இங்கு இயங்கி வந்த ஆய்வு மாளிகைக்கு பதில் கோயிலூர் பைபாஸ் சாலையில் புதிய ஆய்வு மாளிகை புதிய கட்டிடம் கட்டி பயனுக்கு வந்துவிட்டது. இதையடுத்து இந்த கட்டிடம் உபயோகத்திற்கு தேவை இல்லை என்பதால் பழமையான இக்கட்டடத்தை பொதுபணித்துறையினரும் பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அதேபோல் அருகே இருந்த மற்ற பிரிவு கட்டிடங்களும் பயனற்று கிடக்கிறது.

இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பல்வேறு அதிகாரிகள், தலைவர்கள் வந்து தங்கிச்சென்ற ஆய்வு மாளிகை கட்டடம் நினைவுச்சின்னமாக போற்றப்பட வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டாக பராமரிக்காமல் பாழடைந்துள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் குடிமகன்கள் பராகவும், பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து நினைவு சின்னமாக போற்ற வேண்டும். இல்லாவிட்டால் தாலுகா கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்இந்நிலையில் முத்துப்பேட்டை வர்த்தக கழக நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருயை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,முத்துப்பேட்டை தனி தாலுகாவாக இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியது, மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் தாசில்தார் அலுவலகம் கோயிலூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் கட்ட இருப்பதாக அறிகிறோம். அங்கே கட்டப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் நீண்டதூரம் சென்று வர சிரமம் ஏற்படும். கிழக்கு கடற்கரை சாலையை மக்கள் கடந்து செல்லும்போது விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை மூலம் பெற்று அங்கு புதிய தாலுகா அலுவலகம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் சாரு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post பழைய ஆய்வு மாளிகை கட்டிடம் இருக்கும் இடத்தில் முத்துப்பேட்டை புதிய தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும்-திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் வர்த்தக கழக நிர்வாகிகள் மனு appeared first on Dinakaran.

Related Stories: