மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு போலீஸ் காவல் முடிந்து 11 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு

*விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிபிசிஐடி தகவல்

விழுப்புரம் : மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கில் கைதான 11 பேரையும் போலீஸ் காவல் முடிவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷச்சாராயம் குடித்த 8 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விழுப்புரம் கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா (எ) பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு, இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைதுசெய்தனர்.

தொடர்ந்து மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ்காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, விழுப்புரம் அருகே காகுப்பம் ஆயுதப்படை வளாகத்திற்கு கொண்டு சென்று அவர்களிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மெத்தனால் எங்கிருந்து வந்தது. எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளையநம்பி என்பவருக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானகரத்தில் செயல்பட்டு வந்ததாம். நஷ்டத்தில் இயங்கிய ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்துதான் மெத்தனாலை புதுச்சேரியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஏழுமலை என்பவருக்கு விற்பனை செய்தது போன்ற முக்கிய தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே விசாரணைக்குப்பிறகு ஆறுமுகம், ரவி, முத்து, குணசீலன், மண்ணாங்கட்டி ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 30ம் தேதிவரை கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்களைத்தொடர்ந்து சாராய வியாபாரி அமரன், இளையநம்பி, ராஜா(எ)பர்கத்துல்லா, ஏழுமலை, ராபர்ட், பிரபு ஆகியோரை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி(பொ) அகிலா முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.

அதில் அமரனை வரும் 9ம் தேதிவரையிலும், மற்றவர்களை வரும் 1ம் தேதிவரை நீதிமன்ற காவலில் கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான மதனை பிடிக்க தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு போலீஸ் காவல் முடிந்து 11 பேரும் மீண்டும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: