திருப்பதி வனப்பகுதியில் ரெய்டு 16 செம்மரக் கட்டைகள் பறிமுதல்-வேலூரை சேர்ந்த 2 பேர் கைது

திருமலை : திருப்பதி வனப்பகுதியில் இருவேறு இடங்களில் 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து வேலூரை சேர்ந்த இருவரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பிக்கள் முரளிதர், செஞ்சுபாபு ஆகியோர் மேற்பார்வையில் ஆர்ஐக்கள் சுரேஷ்குமார், கிருபானந்தா ஆகியோர் தலைமையில் அடங்கிய இரு தனிப்படையினர் ரோந்து சென்றனர்.

இதில் ரயில்வே கோடூரை சேர்ந்த ஏ.ஆர்.எஸ்.ஐ. பாலசென்னையா குழுவினர், தும்மலபைலு மலை அடிவாரத்தில் சக்கிரேவுலா வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​சிப்பகுண்டி வனப்பகுதியில் சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்வதைக் கண்டனர். அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது ​​போலீசாரை கீழே தள்ளிவிட்டு ஓடினர். இந்த கைகலப்பில் காவலர் எம்.அங்கமாராவ் பலத்த காயமடைந்தார். இருப்பினும், அனைவரும் சமாளித்து இருவரை பிடித்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தன் (28), பொன்னுசாமி (52) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு கிடந்த 5 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஆர்எஸ்ஐ சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார், பாக்ராபேட்டையில் இருந்து புறப்பட்டு, யளமந்தா மற்றும் பிஞ்சா வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஜிலேலா மண்டாவில் உள்ள மாந்தோப்பில் சிலர் செம்மரக்கட்டைகளை எடுத்துச் செல்வதைக் கண்டனர். அவர்களை எச்சரித்து சுற்றி வளைக்க முயன்றபோது, ​​செம்மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு ஓடினர். அங்கு 11 செம்மரக் கட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இரு சம்பவங்களிலும் திருப்பதி அதிரடிப்படை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருப்பதி வனப்பகுதியில் ரெய்டு 16 செம்மரக் கட்டைகள் பறிமுதல்-வேலூரை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: