அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மேட்டூர் அணை திறப்பதற்கு முன் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க வேண்டும்

திருச்சி, மே 27: திருச்சியில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நடப்பாண்டு குறுவை பருவத்துக்குரிய குறுவை சாகுபடி தொகுப்பை மேட்டூர் அணை திறப்பதற்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். டிஆர்ஓ அபிராமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில், தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ ரத்து செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தில், ராஜா சிதம்பரம் (தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர்) பேசும்போது, தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்த முடிவு செய்த பின்னர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அதே போன்று தற்போதும் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்மொழி தெரிந்தவர்கள் அதிகம் இருப்பதால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார நெறிமுறை 2004ல் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிவிப்பை தமிழில் வெளியிட வேண்டும். நுகர்வோர் கருத்து தெரிவிக்க குறைந்தது மூன்று மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, விவசாய நிலங்களை அரசின் அனுமதி இல்லாமலும் அல்லது தவறான காரணங்களை கூறியும் போலி அனுமதி பெற்று வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டும். நீர்வளத் துறைக்கு சொந்தமான வாய்க்கால் கரைகள், ஏரி மற்றும் குளங்களை அழித்து ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும். விவசாய சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து தூக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

வீரசேகரன் (பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர்): நடப்பாண்டு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான விதைகள் தொகுப்பு 20 கிலோ மூட்டையில் தர வேண்டும். உரங்கள் தனியார் நிறுவனங்களைவிட கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரம் வழங்க வேண்டும்.

அயிலை சிவசூரியன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்): ரங்கம் வட்டம் அந்தநல்லுார் பகுதிகளின் கோப்பு கிராம ஊராட்சி கோப்பு முதல் முதலைப்பட்டி வரை வடிகால் வாரியையும், கொடியாலம் கிராம ஊராட்சியிலுள்ள கொடியாலம் பாசன மற்றும் வடிகால்கள், புலிவலம் சுப்புராயன்பட்டி பாசனம் மற்றும் வடிகால்கள், குழுமணி சிவன் கோயில் தச்சக்குடி வாய்க்கால்கள், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆகிய பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இவற்றை பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்டம் வாயிலாக உடன் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மேட்டூர் அணை திறப்பதற்கு முன் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: