அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் அறிமுகம் எஸ்சி,எஸ்டி பிரிவு தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், மே 27: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு; தமிழ்நாடு அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். முந்திரி பதப்படுத்துதல், உணவு பதப்படுத்துதல், மசாலா உற்பத்தி, ரைஸ் மில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், பவர் லூம், இன்ஜினியரிங் தொழில்கள், கட்டுமான பொருட்கள், ரூபிங் ஷீட் உற்பத்தி, மர தளவாடங்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, கான்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெப்ரிஜிரேட்டர் சார்ந்த தொழில்கள் போன்ற எந்த திட்டமாகவும் இருக்கலாம்.

மொத்த திட்டத்தொகையில் 65 சதவீத வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீத அரசின் பங்காக முன் முனை மானியம் வழங்கப்படும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி ஆகும். மேலும் கடன் திரும்ப செலுத்தும் காலத்திற்கு (10 ஆண்டுகளுக்கு) 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயதிற்குட்பட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதி தேவையில்லை. இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் , நவீன மயமாக்கல், மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு முன் மொழிவுகளுக்கும் மானிய உதவி வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் 35 சதவீதம் மானியம் உண்டு. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்த தனி நபரும் மற்றும் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளரும், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.இதற்கு தகுதியும், ஆர்வமும் கொண்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in //www.msmeonline.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அரியலூர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329-228555/ 8925533925/ 8925533926 ஆகிய தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம் அறிமுகம் எஸ்சி,எஸ்டி பிரிவு தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: