சேலம், மே 26: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் 80 ஆண்டுகள் பழமையான தீயணைப்பு நிலையத்திற்கு ₹6 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. தீயணைப்புத்துறையானது முதன் முதலில் இரண்டாம் உலகப்போரின்போது ஏற்பட்ட சேதத்தால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புத்துறை கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தீயணைப்பு நிலையம் ஏற்பட்டது. தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை என்று செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோட்ட அலுவலர் வீதம் இருந்து நிர்வாகம் செய்து வருகிறார். தீயணைப்புத்துறைக்கு ஒரு இயக்குனரும், ஐந்து துணை இயக்குனர்களும் இருந்து வருகிறார்கள். 25 கிலோமீட்டருக்கு ஒரு தீயணைப்பு நிலையம் நிறுவப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகிறது. இந்த தீயணைப்பு நிலையங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரிடர் காலம், வெள்ளம் அபாயம், தீ விபத்து, விலங்குகள், மிருகங்கள் நீர்நிலைகளில் விழும்போது, தண்ணீர் மனிதர்கள் மாட்டிக்கொள்ளும்போது தீயணைப்பு வீரர்கள் சென்று தன் உயிரை பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்றி வருகின்றனர். இவர்களின் சேவை மகத்தானது. கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டியில் 15வது தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கும், தீயணைப்புத்துறை தலைமையிடத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த அரசு தற்போதுள்ள செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை இடித்து நவீன முறையில் மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து சேலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், மேட்டூர் அணை, மேட்டூர் தெர்மல், ஓமலூர், நங்கவள்ளி, சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி என 14 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையங்களில் ஒரு நிலைய அலுவலர், 15 முதல் 20 தீயணைப்பு வீரர்கள் பயணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆட்டையாம்பட்டியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் ஆட்டையாம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் பழமையான கட்டிடத்தை இடித்துவிடித்து புதியதாக நவீன முறையில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த அரசு ₹6 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். புதிய கட்டிடம் மூன்று அடுக்குகளை கொண்டது. இங்கு தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அலுவலகம், நிலைய அலுவலர் அலுவலகம், தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் தங்குவதற்கான அறைகள், வாகனங்கள் நிறுத்த தனியிடம் என்று நவீன முறையில் கட்டப்படும்.
செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால், தற்போது இயங்கி அலுவலகம் செயல்பட தற்காலிகமாக இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் ஆகியோர் இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். இடம் தேர்வு செய்யப்பட்டபின்பு, இங்குள்ள அலுவலகம் மாற்றப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post செவ்வாய்ப்பேட்டையில் 80 ஆண்டு பழமையான சேலத்தின் முதல் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் appeared first on Dinakaran.