அந்தியூரில் இடியுடன் கன மழை கடம்பூர் மலையில் காட்டாற்று வெள்ளம்

அந்தியூர்,மே27: அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் குளம் போல தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக தவிட்டுபாளைம், புதுமாரியம்மன்கோவில், சமத்துவபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் இடியுடன் கூடிய கன மழை அக்னி வெயிலை சமாளிக்கும் விதமாக கொட்டி தீர்த்தது.கடந்த ஒரு வாரமாக அந்தியூர் நகரில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வந்த நிலையில் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இதற்கிடையே கனமழை பெய்ததன் காரணமாக அந்தியூர்- சத்தியமங்கலம் பிரதான சாலையில் தவிட்டுபாளையம் பாலம் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். ரோட்டில் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி சென்றதால் வாகன ஓட்டிகள் தத்தளித்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், தவிட்டுப்பாளையம் பாலம் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததன் காரணமாக ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் போது இவ்வாறு கழிவு நீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் வடிகால் அமைத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம், அரிகியம், கோவிலூர், கோம்பை தொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடு முரடான சாலையில் இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். இதற்கிடையே நேற்று கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர் பள்ளம் காட்டாற்றில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மலை கிராமவாசி ஒருவர் தனது பைக்கில் காட்டாற்றை கடந்து செல்ல முயற்சித்தபோது திடீரென பைக் வெள்ள நீரில் சிக்கி நகர முடியாமல் நின்றது. அப்போது அவ்வழியே வந்த மலை கிராம இளைஞர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி பைக்குடன் சிக்கி தவித்த மலை கிராமவாசியை வாகனத்துடன் மீட்டனர்.

The post அந்தியூரில் இடியுடன் கன மழை கடம்பூர் மலையில் காட்டாற்று வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: