வட்டாரத்திற்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து 14 கிராமங்களில் சிறப்பு வங்கி மேளா: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர், மே 27: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஆரணியாறு மற்றும் கொசஸ்தலையாறு ஏரிகள் 426 மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஏரிகள் 44 என ஆக மொத்தம் 470 ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் சாகுபடி வயல்களில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளிடமிருந்து 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் தகுதியுள்ள 11 நபர்களுக்கு வண்டல் மண், களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

மேலும், சிறப்பு வங்கி மேளா விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை கவனத்தில் கொண்டு அதனை விரிவுபடுத்தும் விதமாக நடப்பாண்டிலும் 2022-23ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 141 கலைஞர் திட்ட கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 நாட்களுக்கு ஒரு முறை வங்கித்துறையின் மூலம் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகள், மாவட்ட தொழில்மையம், தாட்கோ மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை இணைத்து “சிறப்பு வங்கி மேளா” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக வரும் 30ம் தேதி வட்டாரத்திற்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து 14 கிராமங்களில் “சிறப்பு வங்கி மேளா” நடத்த முன்னோடி வங்கி மேலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு வங்கி மேளா நடைபெறும் நாளன்று விண்ணப்பங்கள் பெறாமல், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு எந்திரங்கள் மூலம் ஒரு வாரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விவசாயிகள் பயன்பெறும் வகையில், விண்ணப்பங்களை பெறுவதற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வங்கி மற்றும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கலைஞர் திட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெறும் “சிறப்பு வங்கி மேளா”வில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு வங்கிக்கடன்கள் பெறுவதற்கு தேவையான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடனுதவி உடனடியாக பெற்று பயன்பெறலாம்.

திருவள்ளுர் மாவட்டத்தில் நடப்பு நவரைப் பருவத்தில் 52 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டு, 5,569 விவசாயிகளிடமிருந்து 36,294.56 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித புகார்களும் எழாத வண்ணம் நெல் கொள்முதல் பணி நடைபெறுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சப்-கலெக்டர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள் தலைமையில் திடீர் ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையமானது வியாபாரிகளுக்கு பயன்பட கூடாது. விவசாயிகளுக்கு மட்டுமே பயன்பட வேண்டும், என்பதில் மாவட்ட நிர்வாகம் மிகவும் உறுதியாக இருக்கிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விவசாயிகளிடமிருந்து 160 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி, உதவி வன பாதுகாப்பாளர் ராதை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுபலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வட்டாரத்திற்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து 14 கிராமங்களில் சிறப்பு வங்கி மேளா: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: