வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நீட்டிப்பு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

திருச்சி: ‘கோடை வெயில் கொளுத்துவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அதனால் மே 1ம் தேதி முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் குறித்த விவரங்களை இம்மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன்படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1ம் தேதியும், தொடக்க கல்வியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

நேற்று முன்தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விவாதித்தார். அதில், பள்ளிகள் திறப்பு மற்றும் விடுமுறையை நீட்டிப்பது, வெயிலின் தாக்கம், பாடப்புத்தகங்கள் வினியோகம், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் போதும் வெயில் நீடித்தால் மாணவ, மாணவியருக்கு சிரமம் ஏற்படும் என்றும், பள்ளி திறக்கும் நாளை ஒத்தி வைக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திருச்சி பால்பண்ணை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடோனில் இருந்து பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழக முதல்வர் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக வௌிநாடு சென்றிருந்தாலும், பள்ளிக் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அக்கறையை வௌிப்படுத்தும்விதமாக அவர் பள்ளிகள் திறப்பது குறித்து கேட்டறிந்து வருகிறார். பள்ளிகள் திறக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரித்து வருகிறார். வௌிநாட்டில் இருந்தாலும், நாங்கள் பள்ளி திறப்பதற்கான இரண்டு தேதிகளை குறிப்பிட்டிருந்தோம். வெயிலின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அறிந்து, முதல்வர் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பள்ளிக் கல்விதுறை சார்பில் நாங்கள் அறிவிக்கிறோம்.

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வது என்பது போக்குவரத்து துறையின் பணி. எனவே பள்ளி பேருந்துகளின் நிலை என்ன என்பது குறித்து பள்ளிக்கல்விதுறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளரிடம் பேசி அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளை கொண்டு பேருந்துகளை சர்ப்ரைஸ் விசிட் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். நான் தனியார் பள்ளிகளுக்கு செல்லும்போது, பள்ளி பேருந்துகளை சோதனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளேன்.

ஆசிரியர் கலந்தாய்வு நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஒருசில ஆசிரியர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை தாண்டி, கலந்தாய்வை நாங்கள் இப்படி நடத்திதான் ஆவோம் என்று சொல்வதை காட்டிலும், ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதை சரிசெய்து விட்டு, கலந்தாய்வை நடத்த உள்ளோம். அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும். மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல், பள்ளி வளாகத்தின் சுகாதாரம், குடிநீர், மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிப்பறைகள் அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருக்க வேண்டும். இதை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் தேடி வரும்போது, பெற்றோர்களின் பல சுமைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதில் சிற்றுண்டி, விலையில்லா பொருட்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதால்தான், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனவே கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே இது அரசின் மீதும், பள்ளிக்கல்விதுறையின் மீது உள்ள நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

* பள்ளிகளுக்கு 3.56 கோடி பாடப்புத்தகங்கள் தயார்
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு தேவையான 3.56 கோடி பாடபுத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவை விற்பனைக்காக மண்டல அலுவலகங்களுக்கும், இலவசமாக வழங்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்காக கூடுதலாக 10 சதவீத தமிழ் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தமிழ்பாடங்களை நடத்த தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்ற வேண்டும். இந்த கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் கலைஞர் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் தமிழக முதல்வர் குழந்தைகளுக்கு பாடபுத்தகங்களை வழங்குவார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

* சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும்
பள்ளி திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில்,‘ கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்படுவதால் ஏற்படும் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை சரி செய்ய மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் அந்த விடுமுறை நாட்கள் ஈடு செய்யப்படும்’ என்று தெரிவித்து உள்ளார்.

* குழந்தைகள் விடுமுறையை அனுபவிக்க விடுங்கள்
அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது என்றும், ஓராண்டு காலம் அவர்கள் பள்ளியில் இணைந்து படித்தவர்களுக்கு ஒருமாத காலம் விடுமுறை என்பது அவர்களை விளையாட அனுமதிப்பதற்கானது. இந்த விடுமுறை நாட்களில் நீச்சல், இசை என்று ஏதோ ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளவும், அவர்கள் ரிலாக்சாக இருக்கவும் தான் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை அடுத்த போர்டு தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று பல வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களும் சிறப்பு வகுப்புகளை முன்னெடுக்கிறார்கள். எனவே இதை எச்சரிக்கையாக கூறவில்லை. ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். குழந்தைகளுக்கு விடப்பட்டுள்ள விடுமுறையை அவர்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

The post வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நீட்டிப்பு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: