நாகை அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது ஹிஜாபை கழற்ற சொல்லி பெண் டாக்டருக்கு மிரட்டல்: வீடியோ எடுத்து அடாவடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது

கீழ்வேளூர்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் டாக்டரை ஹிஜாபை கழற்ற சொல்லி மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி சிந்தாமணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு கடந்த 24ம் தேதி இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த பாஜ விருந்தோம்பல் பிரிவு நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் புவனேஷ்ராம் (26) என்பவர் சுப்பிரமணியனை திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர் ஜென்னத்பிர்தௌஸ் (28) மற்றும் செவிலியர்கள் ஆகியோர் சுப்பிரமணியை பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் புவனேஷ்ராம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி செல்போனில் வீடியோ எடுத்தவாறு வாக்குவாதம் செய்தார்.

அப்போது டாக்டரிடம், ‘ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள், சீருடை கிடையாதா, நீங்க டாக்டர் தானா, டாக்டர் என்பதை எப்படி உறுதிபடுத்துவது, எப்படி ஹிஜாப் உடையில் பணி செய்யலாம், ஹிஜாபை கழற்றுங்கள்’ என தரக்குறைவாக பேசி, ரகளையில் ஈடுபட்டதோடு மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், மா.கம்யூ, விசிக, ம.ம.க., ம.ஜக., உள்ளிட்ட கட்சியினர் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நாகப்பட்டினம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாஜ நிர்வாகியை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதுதொடர்பாக டாக்டர் ஜென்னத்பிர்தௌஸ் அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் மீது போலீசார் வழக்குப்பதிவு தேடி வந்தனர். இந்நிலையில், வேளாங்கண்ணியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாஜ நிர்வாகி புவனேஷ்ராமை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post நாகை அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது ஹிஜாபை கழற்ற சொல்லி பெண் டாக்டருக்கு மிரட்டல்: வீடியோ எடுத்து அடாவடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: