யோக வாழ்வருளும் யோக நரசிம்மர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*சிந்தலவாடி, கரூர்

திருச்சி-கரூர் செல்லும் வழியில், கருப்பத்தூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமம் காவேரி ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது. இதனால், பலரும் காவேரி ஆற்றங்கரையில் தினமும் குளித்து வருவது வாடிக்கை. இந்நிலையில், தினமும் ஒருவர் துணிகளை குறிப்பிட்ட கற்களில் அடித்து துவைத்து முடிந்ததும், தானும் குளித்து வந்தார். இப்படியாக நாட்கள் செல்ல இரவில் தாங்கமுடியாத முதுகு வலி அவருக்கு ஏற்பட்டது. இதனால், கடும் அவதிப்பட்டார். தினமும் துணிகளை அடித்து துவைக்கும் கற்களின் பின்புறத்தில் நான் இருக்கிறேன் என சூட்சுமமாக கனவில் தோன்றி நரசிம்மப்பெருமான் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க கருப்பத்தூர் என்னும் கிராமம் அருகிலேயே திருக்காம்புலியூர் என்கின்ற கிராமமும் உள்ளது. இங்கு, நரசிம்ம பக்தரான முஷ்ணம் ஹரியாச்சார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரின் கனவிலும் தோன்றிய நரசிம்மர், காவேரி ஆற்றங்கரையில் குறிப்பிட்ட கற்களின் பின்னால் நான் இருக்கிறேன் என கூறினார். முதுகுவலியால் அவதிப்பட்ட நபரும், ஹரியாச்சாரும் கனவில் நரசிம்மப்பெருமான் கூறிய இடத்திற்குச் செல்கிறார்கள். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். நடந்தவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டார்கள். அதன் பின்னர், அந்த குறிப்பிட்ட கற்களை குப்பறப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த கற்களில் யோக நிலையில் நரசிம்மர் இருந்திருக்கிறாா். பார்த்த அடுத்த நொடி இருவரும் கைகளை தலைக்குமேல் உயர்த்தி `யோக நரசிம்மாய நமஹ…யோக நரசிம்மாய நமஹ… என வேண்டுகிறார்கள்.

அதன் பின், இருவரும் `யோக நரசிம்மரை’ தலையில் வைத்தவாறு, திருக்காம்புலியூரை நோக்கி பயணித்தனா். `சிந்தலவாடி’ என்னும் ஊர் வந்தவுடன் தலையில் வைத்துள்ள யோக நரசிம்மரின் பாரம் அதிகமாகிவிட்டது. இதனால், வலிதாங்காது யோகநரசிம்மரை சிந்தலவாடியிலேயே வைத்துவிட்டாா் ஹரியாச்சாா். சிறிது நேரத்திற்கு பின்னர், இருவரும் நரசிம்மரை தூக்கியுள்ளனா். அவர்களால், முடியவில்லை. அளவிற்கு மீறிய பாரம். செய்வதறியாது இருவரும் திகைத்தனா். மகான் ஸ்ரீவியாசராஜதீர்த்தரிடம் சென்று இதன் விவரங்களை கூறி தெளிவுபெறலாம் என திடீரென்று ஹரியாச்சாருக்கு யோசனை பிறந்தது.

ஸ்ரீவியாசராஜரை சந்தித்த ஹரியாச்சாா், நடந்தவற்றை அனைத்தையும் சொல்லி தீா்வைக் கேட்கிறாா். “ஹரி…உனக்கு இன்னுமா புரியவில்லை? காவேரிக்கரை ஓரமாக, தினமும் காவேரி நீரைக் கொண்டு, நிர்மால்ய அபிஷேகம், கந்தோதக ஸ்நானம் செய்துக்கொள்ள, நம் நரசிங்க பிரபு இங்கே வாசம் செய்ய விரும்புகிறாா்” என்று மகிழ்ச்சி பொங்க வியாசராஜா் கூறினாா். “ஓ…அப்படியா… காவேரி ஓரம்….” என யோசித்தவாறு ஹரியாச்சாா் நின்றியிருந்தாா்.

“இதில் யோசிக்க என்ன இருக்கு ஹரி? சிந்தலவாடியில், காவேரி ஆற்றங்கரை அருகில் நான்தான் ஏற்கனவே முக்யப் பிரானரை (அனுமாா்) பிரதிஷ்டை செய்திருக்கிறேன் அல்லவா! உனக்கு கிடைத்த `யோக நரசிம்மரையும்’ அங்கே பிரதிசஷ்டை செய்வோம். அதையும், நானே செய்கிறேன்.” என்றாா் வியாசராஜா். “அந்த ஹரி, இந்த ஹரியின் மூலமாக வியாசராஜரிடம் சென்று தற்போது இங்கே பிரதிஷ்டைசெய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை காண முப்பிறவியில் நான் கோடானகோடி புண்ணியங்களை செய்திருக்க வேண்டும்” என ஆனந்த கண்ணீருடன் கூறினார் ஹரியாச்சாா்.

மகான் ஸ்ரீவியாசராஜதீர்த்தரால் சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த திருக்கோயிலாகும். இந்த கோயிலில் நரசிம்ம ஜெயந்தி அன்று மூன்று நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அன்று காலையில், ஹரிவாயுஸ்துதி, விஷ்ணுசகஸ்ரநாமம், புருஷஸூக்தம், நரசிம்மருக்கு ப்ரீதியானமன்யுஸூக்தம் போன்ற வேத மந்திரங்களோடு பால், தேன், நெய், தயிர், இளநீர், வெல்லம், மற்றும் பல வகை பழங்களைக் கொண்டு பஞ்சாமிா்த அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகங்கள் முடிந்த பின்னா், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிக அழகாக, யோக நரசிம்மருக்கு அலங்காரங்களை செய்வாா் அங்கு பூஜை செய்பவர்.

நைவேத்யம் ஆன பிறகு, மகா மங்களாரத்தி யோகநரசிம்மருக்கு காட்டப்படும். அதை காண்பதற்கு இருகண்கள் போதாது! பல குடும்பங்களுக்கு சிந்தலவாடி யோக நரசிம்மர் குல தெய்வமாக இருந்து அருளாசி வழங்குகின்றாா். அனைவரும் கட்டாயம் செல்லவேண்டியதிருத்தலம்.யோக நரசிம்மரை சேவித்த பின்னர், அனைவருக்கும் மந்த்ராக்ஷத்தை கொடுக்கப்படுகின்றன. அதனை பெற்றுநரசிம்மரை வேண்டி தலையில் தரித்துக்கொள்வது நல்லது.

யோகநரசிம்மரின் அருகிலேயே கோபால சுவாமியும் உள்ளாா். இவர்களின் அருகில் தனி சந்நதியில் முக்யப் பிரானா் (அனுமாா்) இருக்கிறாா். இது தவிர விநாயகா், நாகா்கள் சந்நதியும் உள்ளது. மேலும், யோக நரசிம்மா் கோயில் அருகில் நடக்கும் தூரத்தில் வெங்கடாஜலபதி கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலும் பழமையானதாகும். இங்கு ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இக்கோயில் அருகில், கோசாலை மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. யோகநரசிம்மரை தரிசிக்க வருபவா்கள், வெங்கடாஜலபதியையும் தரிசித்து செல்கிறாா்கள்.

அது மட்டுமல்ல, சிந்தலவாடியில் இருந்து மிக அருகில், கருப்பத்தூர் அதாவது யோக நரசிம்மா் கிடைத்த ஊரில் சிம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சென்று சிம்மபுரீஸ்வரர் மற்றும் தாயாா் குந்தாளம்பாளை தரிசித்து செல்வதும் வழக்கம்.

எப்படிச் செல்வது?

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, லாலாப்பேட்டைக்கு அடுத்ததாக சிந்தலவாடி இருக்கிறது. மாநகர பேருந்துகள் மட்டுமே சிந்தலவாடியில் நின்று செல்கின்றன. ஆகையால், திருச்சியில் இருந்து கரூா், ஈரோடு, கோவை ஆகிய பேருந்துகளில் பயணித்து, குளித்தலை அல்லது லாலாப்பேட்டையில் இறங்கி மாநகர பேருந்துகளில் பயணிக்க வேண்டும்.

கோயிலின் நேரம்: காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை. மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

The post யோக வாழ்வருளும் யோக நரசிம்மர் appeared first on Dinakaran.

Related Stories: