ஒவ்வொரு முடிவும், ஒரு புதிய ஆரம்பம்!

தரிசு நிலத்தில் விழுந்த விதையும் முளைக்கும் என்கையில் நீங்கள் ஏன் எல்லாமே முடிந்து விட்டதாகக் கருத வேண்டும்? வாழ்வின் விளிம்புக்கே வந்துவிட்டதாய் ஏன் எண்ண வேண்டும்? கனவுகளை ஏன் இழக்க வேண்டும்? ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய ஆரம்பம் உள்ளது. நீங்கள் எதனை முடிவு என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அது விடியலுக்கு முன்பான இருட்டு, அந்த இருட்டு தான் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தி, ஒரு புதிய கனவு உதயம் ஆவதற்கு, ஒரு புதிய வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது.ஒரு செயலை முதலில் செய்கிற போது இருக்கின்ற உற்சாகம் மீண்டும் செய்யும்போது நிச்சயமாக இருக்காது. பனாமா கால்வாயைத் தோண்டும் பணிக்கு ஜார்ஜ் கோதல்ஸ் என்கிற இராணுவத் தளபதி தான் தலைமை வகித்தார்.ஏராளமான ஆட்கள் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். ஆண்டுக்கணக்கில் வேலை நடந்தது. திட்டம் பல யூனிட்டுகளாய்ப் பிரித்து செயல்படுத்தப்பட்டது. ஒரு யூனிட்டில் மட்டும் தோண்டப்பட்ட கால்வாய் நெடுகவும் மண் சரிந்து மூடிக்கொண்டது. மாதக்கணக்கில் தோண்டியது எல்லாம் ஒரே நாளில் பாழானது. எல்லோரிடமும் நம்பிக்கை குறைந்து போனது. வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் இனி என்ன செய்வது என்று ஜார்ஜிடம் கேட்டார்கள். மீண்டும் தோண்டுங்கள் என்று அவரிடம் இருந்து பதில் வந்தது. அவர்கள் மீண்டும் தோண்டினார்கள். இன்று, சரக்கு போக்கு வரத்துக்குச் சௌகரியமான நீர்வழியை உலகம் அனுவித்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு வேலையை மீண்டும் செய்வது அத்தனை சுலபமன்று. உண்மையில் உங்கள் வாழ்விலேயே மிகக் கடினமான காரியம் அதுவாகத் தான் இருக்கும். ஆனால் எப்போதும் உங்கள் உழைப்பை, முயற்சியை வீண் என்று முடிவு கட்டி விடாதீர்கள்.அவை அனைத்துமே அனுபவங்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு முடிவும் முடிவல்ல அது ஒரு ஆரம்பம் என்று நம்புங்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையின் வாழ்க்கையைச் சொல்லலாம்.மும்பையைச் சேர்ந்தவர் மானசி ஜோஷி. அடிப்படையில் ஒரு பொறியியல் மாணவியான இவருக்கு சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டு ஒரு விருப்பமாக இருந்துவந்திருக்கிறது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அப்பாவுடன் பேட்மின்டன் விளையாடுவது மானசிக்குப் பிடித்த விஷயம். படிப்பை முடித்து, வேலைக்குச் சென்றபோது நிறுவனங்களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டிகளில் விளையாட ஆரம்பிக்கிறார். எல்லாம் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தக் கோரமான விபத்தை சந்தித்திருக்கிறார் மானசி.போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையைக் கடக்கும்போது, மானசியின் மீது பெரிய டிரக் ஒன்று மோதி, இடது காலின் மீது ஏறி இறங்கியது.கைகள் உடைந்தன. உடல் முழுக்க ரத்தக் காயங்கள். விபத்து நடந்த பகுதியிலிருந்து அவரை மருத்துவ மனைக்கு கொண்டுபோவதற்கு 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அதன் பிறகு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வதற்கு 7 மணி நேரமாகியிருக்கிறது. மிக மோசமான விபத்து என்பதால், 12 மணி நேரம் மானசிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்திருக்கிறது.இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் மானசியின் நசுங்கிய இடது கால் அழுக ஆரம்பித்திருக்கிறது. வேறுவழியில்லாத மருத்துவர்கள் அதை ஆபரேஷன் செய்து நீக்கியிருக்கிறார்கள்.

கண் விழித்து பார்த்த மானசி தனது இடது கால் எடுக்கப்பட்டதை பார்த்து கண் கலங்கி அழுதிருக்கிறார். அந்த நேரத்தில் தன்னால் இனி ஓட முடியாது என்பதைத் தவிர வேறு எதுவும் அவர் மனதில் இல்லை. அதன்பிறகு 4 மாதங்கள் செயற்கைக் காலுடன் நடக்கப் பயிற்சி எடுத்திருக்கிறார். பிறகு, பழையபடி நிறுவனங்களுக்கு இடையே நடைபெறுகிற பேட்மின்டன் போட்டியில் விளையாட ஆரம்பித்திருக்கிறார். முதல் முயற்சியிலேயே தங்கம் வெல்கிறார். தன்னம்பிக்கை தொற்றிக்கொள்ள, தினமும் மூன்று முறை பேட்மின்டன் பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைத்து தசையை வலுவாக்குவது என்று கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார் மானசி. உலக அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் களமிறங்கியவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் சகஜமாக, 2019-க்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தன் கனவை தன் கடும் உழைப்பால் நிறைவேற்றி சாதித்தார் மானசி.

உலக அளவில் சாதித்து,மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் பெண்களைக் கொண்டாடும் விதமாக அவர்களின் உருவங்களில் பார்பி பொம்மைகளாகத் தயாரிக்கப்படுவது வழக்கம். இதில் ஊக்கப்படுத்தும் பெண் என்ற பிரிவில் முதல் முறையாக இந்தியப் பெண் மானசி ஜோஷி உருவ பொம்மை வெளியிடப்பட்டு பார்பி நிறுவனம் கவுரவப்படுத்தி உள்ளது. பார்பி பொம்மை தயாரிக்கும் நிறுவனம் என்னைப் போன்ற உருவ பொம்மை தயாரித்து வெளியிட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன், இது மற்ற பெண்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக இருக்கும். அன்றாடம் சவால்களை எதிர்கொண்டு சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும் என்கிறார் மானசி. மேலும் பார்பி அடல்ட் பொம்மையாக இருந்தாலும்,அந்த பொம்மையால் ஈர்க்கப்படுவது குழந்தைகள்தான், அதுவும் குறிப்பாக, பெண் குழந்தைகள் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் மானசி. பொதுவாகவே பார்பி பொம்மைகள் என்றாலே அழகும், கச்சிதமான உடல் அமைப்பும் என தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கறுப்பு, சிவப்பு, மாநிறம், பருமன், ஒல்லி, மாற்றுத்திறனாளிகள் என அனைத்துவிதமான பொம்மைகளையும் தயாரித்து வருகிறார்கள். இதில் என் உருவ பொம்மையும் அடங்கியிருப்பது பெருமையாக உள்ளது.

மானசி விபத்தை சந்தித்து கால்களை இழந்து மீண்டும் தன்னுடைய இலக்கை அடைய போராடத் தொடங்கினார். வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு முடிவும் முடிவல்ல அது ஒரு புதிய ஆரம்பம் என்பதை புரிந்து கொண்டு, தன்னுடைய வெற்றி நம்பிக்கையால் மட்டுமே உருவானது என்பதை நிரூபித்துள்ளார். மானசி வாழ்வில் நடைபெற்ற துயரச் சம்பவங்கள் வேறு யாருக்காவது நடந்திருந்தால் நினைத்து பாருங்கள், வீட்டின் மூலையிலேயே முடங்கிக்கிடப்பார்கள். ஆனால் வலியைக் கடந்து கனவுகளை நோக்கிப் பயணித்துச் சாதித்த சாதனை மங்கைதான் மானசி. இவரைப் போலவே நீங்களும் முயலுங்கள், உங்கள் வாழ்விலும் ஒவ்வொரு முடிவும், முடிவல்ல, அது ஒரு அழகான புதிய ஆரம்பம் என்று நினைத்து வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

– பேராசிரியர்,
அ.முகமதுஅப்துல்காதர்.

The post ஒவ்வொரு முடிவும், ஒரு புதிய ஆரம்பம்! appeared first on Dinakaran.

Related Stories: