திருவனந்தபுரத்தில் ஆளில்லா வீடுகளில் கைவரிசை பணம், நகையை குழிதோண்டி புதைத்து வைத்த பலே திருடன்

* பொறி வைத்து பிடித்த போலீஸ் * 47 பவுன், ₹1.50 லட்சம் மீட்பு

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் ஆளில்லாத வீடுகளை உடைத்து கொள்ளையடித்த ஆசாமி, பணம், நகையை வீட்டில் குழிதோண்டி புதைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நகை, பணத்தை மீட்டனர். திருவனந்தபுரத்தில் கடந்த சில மாதங்களாக ஆளில்லாத வீடுகளை உடைத்து நகை, பணம், பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட ஒரு வீட்டை உடைத்து 47 பவுன் நகைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அந்த வீட்டில் கொள்ளையடித்தது திருவனந்தபுரம் வஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் விளப்பில்சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெயக்குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த ஜெயக்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது திருவனந்தபுரம் நகர பகுதியில் மட்டும் 12 வீடுகளை உடைத்து கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் கொள்ளை அடித்த நகை, பணம், பொருட்களை அவரது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு ஆள் இல்லாத வீட்டில் குழி தோண்டி புதைத்து வைத்து இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். உடனே போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டில் உள்ள மாடிபடிக்கு கீழே நகை, பணத்தை புதைத்து வைத்து இருப்பதாக ஜெயகுமார் கூறினார்.

உடனே அந்த இடத்தை சிலரது உதவியுடன் போலீசார் தோண்டினர். அப்போது 47 பவுன் தங்க நகைகள், ₹1 லட்சத்து 50 ஆயிரம் பணம், வெளிநாட்டு டாலர்கள், வெள்ளி நகைகள் உள்பட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு நடந்த விசாரணையில், பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து ஜெயக்குமார் கொள்ளையடித்து வந்து உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர விசாரணைக்குப் பிறகு போலீசார் ஜெயக்குமாரை திருவனந்தபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவனந்தபுரத்தில் ஆளில்லா வீடுகளில் கைவரிசை பணம், நகையை குழிதோண்டி புதைத்து வைத்த பலே திருடன் appeared first on Dinakaran.

Related Stories: