பேரருள் பொழியும் லலிதா சஹஸ்ரநாமம்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 1

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

ஆதிசக்திக்கு ஆயிரம் நாமங்கள் என்கிற லலிதா சஹஸ்ரநாமத்தின் உரையை பார்க்கும் முன்பு அடிப்படையாக சில விஷயங்களை அறிந்தும் தெளிந்தும் நகரலாம் என நினைக்கின்றேன். சட்டென்று தலைப்பின் விஷயத்திற்குள் போகாமல் நாம் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் விஷயங்களை பேசிவிட்டு, நம் மனதின் அனுபவ மண்டலத்திலுள்ள அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்டு விட்டு நகர்வோம்.

இல்லையெனில் புராணங்கள் கூறும் அதி சூட்சும விஷயங்கள், நாம் வாழ்வோடு தொடர்பிலாது தனித்து இருப்பதாகக் நினைத்துக் கொண்டு விடுவோம். போகிற போக்கில் ஏதோ பெரியவர்கள் லலிதா சஹஸ்ரநாமத்தை சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று மிகச் சாதாரணமாக கடந்து போய்க் கொண்டிருப்போம்.

அதனால், உங்கள் மனதிடம் சொல்லி வைத்து விடுங்கள். இந்த மாபெரும் லலிதா சஹஸ்ரநாமம் எனும் நாம யாகத்தை (யக்ஞத்தை) உள்ளுக்குள் கொண்டு வரவேண்டுமெனில் உங்களின் கேட்கும் செவியை, அதை உள்வாங்கும் மனதை, இந்த நாமத்தை சொல்லும் நாவை, அதை பதிய வைத்துக் கொள்ளும் மனதை மெதுவாக மெதுவாக பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள்.

இல்லையெனில் வாழ்வை அதன் ஆதாரமாக விளங்கும் அம்பிகையை நம்முள் நாம் தவறவிட்டபடி இருப்போம். அவள் பிரசன்னமாகி ஒளிர்ந்தாலும் அதை பார்க்கும் விதம் அறியாது மனமெனும் வேகத்தால் தவற விட்டு விடுவோம்.

‘‘நேரடியாகப் பேசுவோம். இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை நான் சொன்னால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பரவாயில்லை கேளுங்கள் என்கிற லலிதா சஹஸ்ரநாமம்.’’
‘‘இதைச் சொன்னால் என் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணமாகுமா.’’
‘‘நிச்சயம் ஆகும்.’’
‘‘நான் வீடு வாங்குவேனா? என் குழந்தைகள் நன்றாக படிப்பார்களா? கை நிறைய பணம் சம்பாதிப்பேனா? சொத்து சேர்க்கை இருக்குமா? சமூகத்தில் பேரும் புகழும் கிடைக்குமா? உடம்பின் ஆரோக்கியம் சீராகுமா? எடுக்கும் முயற்சிகள் யாவினிலும் வெற்றி கிட்டுமா? எதிரிகளற்ற வாழ்வு அமையுமா? எவரிடமும்
அவமானப் படாமல் இருப்பேனா? புண்படுத்தும் மனிதர்களிடம் விலகியிருப்பேனா?

உறவுகள் என்னை புரிந்து கொள்வார்களா? நான் அழகாக இருப்பேனா? என் மன உளைச்சல் நிற்குமா? நிம்மதி எனும் வார்த்தையை மட்டுமே அறிவேன். அதை அனுபவத்தில் உணர்வேனா? இப்படி எத்தனை ஆயிரம் விஷயங்களை கேட்டாலும் அனைத்தையும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் அருளும். பொருளும் சேரும். எவை வேண்டாததோ அதை விலக்கவும் செய்யும்.

நாம் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். அல்லது நான் என்னதான் தேடிக் கொண்டிருக்கின்றேன். வாழ்வின் இலக்குகள் என்ன? இன்னொருவர் தேடுவதையே நாமும் தேடிக் கொண்டு உழல்கிறோமே, எல்லோரும் எதைச் செய்கிறார்களோ… அதையே நானும் செய்கிறேனே என்கிற உணர்வேயில்லாமல் ஓடி ஓடி களைத்து மரணம் வரை செல்லும் வாழ்க்கை உணர்த்துவதுதான் என்ன? நம் கண் முன்னால் இன்பம், துன்பம், பிரச்னைகள், பயம், கோபம், காமம், பொறாமை, அசூயை, சோகம், துக்கம், மரணம், இழப்பு, சந்தோஷம் இன்னும் இன்னும் எத்தனையோ நூற்றுக் கணக்கான உணர்வுகள் நம்மை தினம் தினம் அலைகழித்துக் கொண்டிருக்கின்றன.

ஏன், இப்படி என்னை அலைகழிக்கின்றன. மனம் சில சமயம் அமைதியான கடல்போல இருக்கிறது. சிலபோது கொந்தளித்து தள்ளுகின்றது.’’

‘‘இவை அனைத்திற்கும் லலிதா சஹஸ்ரநாமத்திற்குள் விடை இருக்கின்றதா?’’
‘‘ஆமாம், நிச்சயம் விடை இருக்கின்றது.’’
‘‘ஆனால், அதற்கான விடை இவ்வளவுதான் என்று ஒற்றை வரியிலோ அல்லது பல வரிகளிலோ அல்லது நமது விரும்பும் விதமான விடைகளையோ அவசரப்பட்டு பார்க்கப் போவதில்லை. இதற்கும் முன்பு எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே என்றும் பார்க்கப் போவதில்லை. இதற்கான விடையை லலிதா சஹஸ்ரநாமம் எப்படிச் சொல்கின்றது என்பதை நுட்பமான முறையில், பொருள் உணர்ந்து, அடுக்கடுக்காக ஒவ்வொரு நாமத்தில் உள்ளேயும் சென்று தரிசிக்கப் போகிறோம்.

அதற்கு முன்பு வேறொன்றையும் பார்க்க வேண்டும். அதாவது, நம் கண்ணுக்கு எதிரேயுள்ள விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஜீவனும் அடிப்படையாக தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் என்று சிலது உண்டு. அந்தக் கேள்விகள் நமக்கு பரிச்சயமாகி இருந்தாலும், அந்தக் கேள்விகள் அனைத்தும் நமது சமூகத்தில் புழக்கத்தில் இருந்தாலும், நமது காதுகளுக்கும் மூளைக்கும் அறிவிற்கும் நன்கு பழக்கப்பட்டு தேய் வழக்காகி விட்ட கேள்விகளாக இருந்தாலும் நாம் விடாது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?

உண்மையிலேயே வாழ்க்கை என்றால் என்ன? பல்லாயிரம் முறை, நூற்றாண்டுகளாக இந்த மானுட சமூகம் இந்த கேள்வியை கேட்டபடி உள்ளது. ஆனால், உண்மையாக இந்தக் கேள்விக்கான பதிலையோ அர்த்தத்தையோ நாம் உணர்ந்திருக்கிறோமா? வாழ்க்கை… வாழ்க்கை… நொடிக்கு நூறு தரம் சொல்லிக் கொண்டிருப்போம். உண்மையிலேயே வாழ்வு, வாழ்க்கை போன்ற பதங்கள் சுட்டும் விஷயத்தை அனுபவப் பூர்வமாக வாழ்கிறோமா?

இல்லை. அல்லது தெரியவில்லை. இதையும் தாண்டி ஏதோ வாழ்க்கை போகிற போக்கில் என்று சில பதில்கள் சொல்வோம். ஆனால், நம்முடைய பாரத தேசத்து ஞானிகள், மகான்கள், பழம் பெரும் ரிஷிகள் நமக்கு வேறு விடையை வாழ்க்கைக்கான அர்த்தத்தை காட்டுகின்றார்கள். அவர்கள் மிகமிக அடிப்படையான ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகின்றார்கள்.

‘‘இங்கு வா. வந்து அமர். பொறுமையாக நான் சொல்வதை கேள். நீ தேடுவது சுகம். சந்தோஷம். அது உனக்கு தெரியும் அல்லவா. ஆனால், உனக்கு சுகம் கிடைக்கின்றது. அது உனக்கு கிடைக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அந்த சுகம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போய் விடுகின்றதை என்றேனும் கவனித்திருக்கிறாயா. கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் உன் உடலில் உள்ள பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி வழிகளின் வழியே உன் மனம் அனுபவிக்கும் சுகங்களையே வெவ்வேறு விதங்களாக அனுபவிக்கின்றாய். அல்லவா.’’

‘‘ஆமாம்’’

‘‘இதில் தவறொன்றும் இல்லை. இந்த மனமானது இந்த சுகங்களையே கொஞ்சம் பிரமாண்டப்படுத்தி மெய் எனும் ஸ்பரிசத்திற்காக என்னென்ன விஷயங்களை இந்த உலகிலிருந்து பெற முடியுமோ அத்தனைக்கான முயற்சிகளையும் செய்கின்றது. அதேபோல வாய் ருசிக்காக என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யும். கண் தான் எதையெல்லாம் பார்க்க முடியுமோ எதையெல்லாம் பார்த்தால் கண்ணுக்கு கண நேர சந்தோஷம் முதல் நீண்ட நேர சந்தோஷத்தை தக்க வைக்க முடியுமோ அத்தனையும் அது பார்க்கும். இதேபோல மூக்கு. அப்படியே செவியும்….

கொஞ்சம் தனியாக அமர்ந்து யோசி. அப்படியே இந்த உலகத்தைப் பார். இங்கு நீ அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்தும் இந்த ஐந்து பொறிகளின் விளைவாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள். கொஞ்சம் பொறுமையாக விசாரம் செய்து பழகு. அடுத்து ஏன் இந்த சுகங்களை நீ தேடுகின்றாய் தெரியுமா. நீ சுகத்தைத்தான் இடையறாது தேடுகின்றாய் என்பதாவது தெரியுமா. பதவிகளில், பொறுப்புகளில், அதிகாரத்தில் என்று உன்னால் தேடப்படும் விஷயங்களுக்குள்ளும் இந்த சுகம் இருப்பதை அறிவாயா. அப்படியெனில் நீ தேடுவது சுகம்… சுகம்.. சுகம்… ஆனால், உனக்கு அன்றாட வாழ்வில் கிடைக்கும் இந்தச் சுகமானது தற்காலிகமானது. இந்தச் சரீர அளவிற்கு உட்பட்டது அவ்வளவுதான். மிகக்குறுகிய எல்லைக்குட்பட்டது.’’

‘‘அப்படியெனில் உண்மையான சுகம் எது’’

‘‘சொன்னால் நம்புவாயா… அந்த உண்மையான சுகம் என்பது நீயே… அந்த நீ என்பது இப்போது உன்னை உடம்பாக நினைத்து, மனமாக மயங்கி இருக்கும் நீ அல்ல. அகங்காரம் எனும் நான் அல்ல. நீ என்கிற அதாவது உண்மையான நான் என்பது சரீர அளவிற்கு உட்படாமல் அண்டமெல்லாம் நிறைந்திருக்கின்ற பெரும் சக்தி. இப்போது நான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் உடம்பையே அதாவது நான் என கருதிக் கொண்டிருக்கும் போலி நான் அல்ல. அந்த நான் என்பது பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்பது. அங்கிங்கெணாதபடி எங்கும் பரவி ஆனந்தப் பூர்த்தியாகி மலர்ந்திருப்பது.

அபிராமபட்டர் சொல்வதுபோல ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை என்கிறார். நீங்கள் பார்க்கும் உலகமெல்லாம் அவளே நிறைந்திருக்கின்றாள். அந்த ஆதிசக்தியை உணர்வதே உண்மையை அறிவதாகும். அவளே சத்திய வஸ்து. அந்த ஆதிசக்தியே தன்னை லலிதா எனும் நாமத்தோடு தன்னை வெளிப்படுத்துகின்றாள். அவளை அறிவதே உன்னை அறிவதாகும். நீயும் அவளும் வெவ்வேறு அல்ல. இப்போது வெவ்வேறாக தெரிகின்றது எனில் எது தடை தெரியுமா.’’

‘‘எது தடை’’

‘‘சரீரமே நான் என நினைக்கும் எண்ணம். அந்த எண்ணத்திற்கு மூல வேராக இருக்கும் நான் என்கிற அகங்காரம். சிறு சிறு சுகங்களுக்காக ஏங்கி… ஏங்கி… அனுபவித்து அனுபவித்து ஜென்ம ஜென்மங்களாக சேர்த்து வைத்த வினைகளில் உழலுகின்ற மனம். ஆனால், அந்த ஆதிசக்தி, அம்பாள், லலிதாம்பிகையானவள் என்றும் கைவிடப் போவதில்லை. மிக மிகக் கருணையோடு உன்னை பார்க்கின்றாள். இப்படி இந்த சரீரத்தோடு மட்டும் தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறாயே… அண்டம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆனந்தமான என்னை அறியாமல் அறியாமையில் கிடக்கிறாயே என்று கருணையோடு வழி காட்டுகின்றாள்.

அந்த வழிக்கே… அந்தப் பெரும் பாதைக்கே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்று பெயராகும். இந்த சஹஸ்ரநாமமும் லலிதாம்பிகையும் ஒன்றே. அப்பேற்பட்ட பிரமாண்ட சக்தி கருணையோடும் கம்பீரத்தோடும் குழைவோடும் எழுத்துக்கள் என்கிற அட்சரமாக மாறி, சப்தப் பிரம்மமாகி லலிதா சஹஸ்ரநாமம் என ஆயிரம் நாமங்களில் தன்னுருவை தான் எடுத்துக் கொண்டிருக்கிறாள். வெளியே பிரபஞ்சத்தில் எவையெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் நானே என அந்த எழுத்து என்கிற சப்த பிரம்ம வடிவில் சொல்கிறாள்.

லலிதா என்கிற அந்த மகாசக்திக்கும் இதோ சஹஸ்ரநாமம் என்கிற எழுத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இனி நாம் செய்ய வேண்டியது, அந்த எழுத்துக்களாகி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகையை நாம் சொல்வதே ஆகும். அந்த எழுத்து நாவால் சொல்லப்பட்டு மனதால் கிரகிக்கப்பட்டு தன்னுள் கரைத்துக் கொள்ளும். அப்போதுதான் தெரியும்… பிரபஞ்சம் என்கிற மாயையை காட்டும் மனதை, அகங்காரத்தை, சரீரம் என்கிற அபிமானத்தை, எப்படி இந்த நாமம் மெல்ல மெல்ல கரைத்து ஞானம் எனும் அம்பிகையோடு உன்னை இணைத்திருக்கிறாள் என்பது புரியும்.

அவளே ஆதி பிரம்ம சக்தி. அவளே இங்கு வானமாக விரிந்திருக்கிறாள். அதில் மிதக்கும் நட்சத்திரங்களாகி ஒளிர்கிறாள். பூர்ண பௌர்ணமியாக ஜொலிக்கிறாள். அப்படி ஒளிர்பவளே தேய்கிறாள். வளர்பிறையாகி அடுக்கடுக்காக பெருகுகிறாள். மீண்டும் அரை அரையாக குறைந்து தேய்பிறையாகி சுருங்குகிறாள். அமாவாசை எனும் இருள் வட்டமாகிறாள். தன்னை மறைத்துக் கொள்கிறாள். வானில் மேகங்களாகி பொதிப் பொதியாக மலைபோல் நடக்கின்றாள். அந்தரத்தில் அலைஅலையாக நகர்கிறாள்.

ஆங்காங்கு கருணை மழையாக நிலத்தில் பெய்து ஜீவர்களை காக்கிறாள். அருவியாகி நிமிர்கிறாள். ஆறாகி நடக்கிறாள். அவளே விதையாகி மண்ணில் ஊறுகிறாள். மண் பிளந்து செடியாகிறாள். பூவாகிக் காயாகிக் கனிந்து விதையாகி மரங்களாகி அடர்ந்து படர்ந்து கானகமாக நிறைகின்றாள். கடலும் அவளே. கடலில் எழும் சூரியனும் அவளே. மலையில் விழுந்து மறையும் மாலையும் அவளே. இருளும் அவளே. விடிவும் அவளே. ஆணும் அவளே. பெண்ணும் அவளே. கருவில் தங்குபவளும் அவளே. தாயாக்குபவளும் அவளே. குழந்தையும் அவளே.

பிஞ்சுக் கரங்களின் மென்மையும் அவளே. பருவங்களாகி வளர்பவளும் அவளே. இளமையின் வேகமும் அவளே. முதுமையின் தெளிவும் அவளே. மானிடர்களின் குணங்களும் அவளே. சிருஷ்டியும் அவளே. ஸ்திதி என்கிற நிலை நிறுத்தி வளர்ப்பவளும் அவளே. சம்ஹாரமும் அவளே. யாவற்றையும் மறைக்கும் திரோதனம் எனும் சக்தியும் அவளே. எண்ணமும் அவளே. மனமும் அவளே. இதோ இப்போது நீ கேட்கின்ற இந்த செவியை படைத்து அதன் வழியே மனதிற்கு அனுப்பும் காரியத்தைச் செய்யும் சிரவணம் எனும் சக்தியும் அவளே. சிரத்தை எனும் அதிதீவிர ஆர்வமாகி சலனமற்ற சித்தமாக இருப்பவளும் அவளே.

சித்தத்தை ஒரே தாரையாக நிறுத்தி வைக்கும் ஏகாக்கிரகம் எனும் சக்தியும் அவளே. நிலைத்து நின்று தியானமாகி தன்னுள் ஆழச் செய்பவளும் அவளே. ஆழ்ந்து அகன்று சென்று அங்கே ஆத்ம சொரூபமாக வேறொன்று இல்லாத தானே தானேயாக உன்னை, உன் மனதை விழுங்கிவிட்டு அவளே அமர்ந்திருக்கிறாள். உன்னை அவளாக மாற்றுபவளும் அவளே என்பதை புரிந்து கொள்ளப்பா!

இப்போது சொல். அப்பேற்பட்டவளாக இருப்பவளால்… உன் வாழ்வில் நீ விரும்பும் ஆசைகளை பூர்த்தி செய்யமாட்டாளா. உன்னுடைய குடும்ப வாழ்வில் நீ கேட்கும் பணம், பதவி, குழந்தை, திருமணம், செல்வம், ஆரோக்கியம் போன்ற விஷயங்களை எத்தனை அநாயாசமாக செய்து முடிப்பாள் அல்லவா! எனவே, ஆயிரம் நாமங்களை நம் மனம் வாங்கும்போது சொல் சொல்லாக நில்லாது அருளாகி ஒளிர்ந்து உள்ளுக்குள் ஊடுருவும். நெஞ்சு குழையும். மனம் தன்னை இழக்கும். உள்ளிருக்கும் ஞானாமிர்தம் மேலே பொங்கிப் பொங்கி நுரைத்து வரும். அக இருள் காணாதுபோம்.

முகம் பொலிவாகும். புத்தி சுடராகி நிற்கும். நாமத்தின் பொருள் வார்த்தையாக விரியாது, அனுபூதி என்கிற பேரனுபவத்தில் திளைக்க வைக்கும். அதுவே ஆத்மானுபவம். இதை நீ கண்ணுறுவாய். இனி… இந்த ஜீவன் மனம், சித்தம், தோல் போர்த்திய சரீரம் எனும் சிறையில் அடைபடாது அகண்டம் எனும் ஆத்மாவில் நிலை பெறும். இப்போது நாம் மேலே சொன்னவை, சிறு தொடக்கம். இது கடல் என படத்தைச் சுட்டுவது போன்றது. அலை ஆர்ப்பரிக்கும் கடலை தொலைவிலிருந்து குழந்தைக்கு விரல் சுட்டி விழி விரித்து பார்க்க வைப்பது. இன்னும் இன்னும் லலிதாம்பிகையின் பிரமாண்ட பிரபாவத்தை இந்த நெடுந் தொடர் மூலம் தரிசிப்போம் வாருங்கள்.

இப்பேற்பட்ட லலிதா சஹஸ்ரநாமம் யாரால் அருளப்பட்டது. பூமிக்கு கொணர்ந்த மகான்கள் யார் யார் என அடுத்த இதழில் பார்ப்போம்.

(சக்தி சுழலும்)

The post பேரருள் பொழியும் லலிதா சஹஸ்ரநாமம் appeared first on Dinakaran.

Related Stories: