சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவு

சென்னை, மே 26: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி விரைந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக தொடர்புடைய துறைகளின் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமை வகித்தார். கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகளை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தின் போது அதிகாரிகள் மத்தியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா பேசியதாவது: மழைநீர் வடிகால் அமைத்தல் தொடர்பாக வெ.திருப்புகழ் தலைமையிலான ஆலோசனைக் குழு வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே உள்ள பழைய சாலையை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலை அமைத்து, சாலைகளில் பெய்யும் மழைநீரானது மழைநீர் வடிகாலில் சென்றடையும்படி அமைக்க வேண்டும். மழைநீர் வடிகாலில் குறிப்பிட்ட இடைவெளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்க வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக்காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களில் மழைநீர் சேகரிப்புக்கான நீர் உறிஞ்சும் அமைப்புகளை உருவாக்குவது, மழைநீர் வடிகால் பணிகளை தொடர்புடைய அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதை தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையும் வரவுள்ளது. எனவே மழையை முன்னிட்டு நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுதல், தேவையான இடங்களில் மோட்டார் பம்பு செட் அமைத்து மழைநீரை அகற்றுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், கூடுதல், இணை, துணை ஆணையர்கள் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: