ரூ.1.14 கோடியில் கட்டப்பட்ட செட்டிகுளம் சின்ன வெங்காய வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வருமா

பாடாலூர், மே 26: ரூ.1.14 கோடியில் கட்டப்பட்ட செட்டிகுளம் சின்ன வெங்காய வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வருமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள வெங்காயம் வணிக வளாகத்தில் தினந்தோறும் சின்ன வெங்காயம் ஏலம் மற்றும் விற்பனை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை வகிக்கிறது. இதில் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர், இரூர், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் ஆலத்தூர் தாலுகாவில் சராசரியாக 3,396 ஹெக்டர் பரப்பளவில் 33,960 மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து விற்பனை செய்யும்போது உரச் செலவு, விதை வெங்காயச் செலவு, ஆள் கூலி ஆகியவை போக குறிப்பிட்ட லாபம் கிடைப்பதால் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். குறிப்பிட்ட விலை கிடைக்காத பட்சத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பட்டறை கட்டி வெங்காயத்தை சேமித்து வைக்கின்றனர். அவ்வாறு பட்டறையில் சேமித்து வைக்கப்படும் வெங்காயம் 3 முதல் 4 மாதங்கள் வரை தான் வீணாகாமல் இருக்கும். விவசாயிகள் அவ்வாறு பட்டறை கட்டி வைத்து விற்பனை செய்யும்போது, போதிய விலை கிடைப்பதில்லை.

இதனால் தமிழக அரசு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்து 4 மாதத்திற்கு மேல் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதற்காக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளத்தில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் சின்ன வெங்காயம் குளிர் பதன சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது. 0. 80 ஹெக்டேர் நிலத்தில் 50 மெட்ரிக் டன் சின்ன வெங்காய்தை சேமிப்பற்காக ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய குளிர் சாதன அறைகள், தரம் பிரிக்கும் கொட்டகை, 10 விற்பனை நிலையங்கள் மின்சார வசதிகள் உள்ளிட்ட குளிர் பதன கிடங்கு 2011 ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு முடிவுற்றது. இந்த சின்ன வெங்காய குளிர் பதன கிடங்கில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்தால் வங்கியில் கடன் வழங்க உதவி செய்யப்படும் என்று கூறியும் எந்த விவசாயியும் குளிர் பதன கிடங்கில் வெங்காயத்தை வைக்க முன் வரவில்லை.

இதுபற்றி விவசாயிகளிடம் கேட்டதற்கு, ‘ இங்கு வரும் வியாபாரிகள் கூடி பேசிக் கொண்டு விலையை குறைத்து விலை நிர்னயம் செய்கின்றனர். அதிக விலைக்கு கேட்பதில்லை. இதனால் இந்த விற்பனை நிலையத்துக்கு சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் வருகை குறைந்து போனது. இதனால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக இந்த விற்பனை செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. இதனால் சில வியாபாரிகள் வெங்காயத்தை விவசாய நிலத்திற்கு நேரில் சென்று வாங்கி லாரியில் ஏற்றி செல்கின்றனர் என்றார். ஒரு சில வியாபாரிகள் திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பெரிய நகரங்களுக்குச் சென்று மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்வதால் இங்கு வருவதில்லை.

எனவே செட்டிக்குளத்தில் உள்ள சின்ன வெங்காய வணிக வளாகத்தை திறந்து அங்கு தினமும் ஏல முறையில் சின்ன வெங்காயம் விற்பனை நடைபெறவும், இதில் வெங்காய வியாபாரிகள் பெருமளவு வருகை தந்து வெங்காயத்தை கொள்முதல் செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post ரூ.1.14 கோடியில் கட்டப்பட்ட செட்டிகுளம் சின்ன வெங்காய வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வருமா appeared first on Dinakaran.

Related Stories: