திருவெறும்பூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை

திருவெறும்பூர், மே 26: திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதியில் நேற்றிரவு இடி மின்னல் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் மின் விநியோகம் இல்லாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் திருவெறும்பூர், கூத்தைப்பார், வேங்கூர், நடராஜபுரம், துவாக்குடி, அரசங்குடி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறையும் என பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் காற்றுடன் பெய்த மழையால் திருவெறும்பூரில் இருந்து செல்லும் ஜெய்நகர்கரை சாலை ஓரம் இருந்த பனைமரம் முறிந்து அருகே இருந்த மின் கம்பத்தில் விழுந்தது. இதனால் இரண்டு மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஜெய்நகர் கரைசாலையில் அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். சாலையோரம் பனைமரம் விழுந்ததால்ம அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தையும், மின்கம்பத்தையும் பொதுமக்கள் உதவியுடன் மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தியனர். அதேபோல் ஜெய்நகர் பகுதியில் கொடுக்காப் பள்ளி மரம் முரிந்து சாலையில் விழுந்தது அதனையும் பொதுமக்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

ஜெய்நகர் கரைப்பகுதியில் மின் கம்பம் முறிந்து விழுந்ததால் திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதியில் மின் விநியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

The post திருவெறும்பூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை appeared first on Dinakaran.

Related Stories: