வில்லியனூர் ஸ்ரீகோகிலாம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வில்லியனூர் ஸ்ரீகோகிலாம்பிகை

புதுச்சேரி அருகே, வில்லியனூரில் அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் சிறப்பம்சம், பிரசவ நந்தி இங்கு உள்ளார். பொதுவாக, சிவாலயங்களில் உள்ள அம்மனின் முன்பு அம்மனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கும். இத்தலத்திலும் அதேபோல் ஸ்ரீகோகிலாம்பிகை அம்பிகையின் முன் ஒரு நந்தி இருந்தாலும், அந்த நந்திக்கு முன்பு ஒரு சிறிய நந்தியும் இருக்கிறது. இதுவே பிரசவ நந்தியாகும். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் கோகிலாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, இந்த நந்தியை, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.

மாங்காடு – காமாட்சி

மாங்காட்டின் மையத்தில் அமர்ந்த மகாதேவி. ஆதிசங்கரரால் போற்றித் துதிக்கப்பட்ட ஆதிசக்தி. ஒரு காலத்தில் அக்னிக்கு மத்தியில் உக்கிர தவமிருந்தாள். தவத்தின் வெம்மை காட்டிற்குள்ளும் எவரையும் நெருங்கவிடாது தடுத்தது. ஆதிசங்கரர் அம்மையின் உக்கிரமான இருப்பை உணர்ந்து சாந்தமாக்கி எல்லோரையும் அருகே வரச் செய்தார். அர்த்தமேரு மகாயந்திரம் எனும் யந்திரத்தை ஸ்தாபித்து, சக்தியின் மழையில் எல்லோரையும் நனையச் செய்தார். அம்மை தாய்மையோடு உயிர்களை நோக்கினாள். இன்னருளை பொழிந்தாள். திருமணமா… குழந்தைப்பேறா… உத்யோக உயர்வா… ஞானத் தேடலா… என்று எல்லாவற்றையும் கைமேல் கனியாக எளிதாக அருள்கிறாள், இந்த மாங்காட்டு நாயகி. சென்னையில் குன்றத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய இரு ஊர்களுக்கும் நடுவே உள்ளது.

தளவாய்புரம் துர்க்கை

பொதுவாக சிவாலய கோஷ்டத்தில்தான் துர்க்கை காட்சி தருவாள். அபூர்வமாக சில தலங்களில் மூலவராக தனிக் கோயில் கொண்டிருப்பாள். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் தளவாய்புரம். துர்க்கை அம்மன். இங்கு நான்கு திருக்கரங்களுடன் கிழக்குத் திசை நோக்கி சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கிறாள். வியாபாரம் செழிக்கவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் பௌர்ணமி அன்று இங்கே பிரத்யங்கரா யாகம் நடைபெறுகிறது. யாகத்தில் கொட்டப்படும் மிளகாய் வற்றலால் சிறு கமறல்கூட இருக்காது என்பது அதிசயம்! இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை திருநெல்வேலி ரயில் பாதையில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கயத்தாறு செல்லும் பாதையில் பயணித்தால் தளவாய்புரத்தை அடையலாம்.

திருநறையூர் – ஸ்ரீஆகாசமாரி

கௌரவ குலத்தினர் எனும் கவரைச் செட்டியார்கள் வெளியூர்களுக்குச் சென்று வளையல் வியாபாரம் செய்வது வழக்கம். அவ்வாறு அவர்கள் சமயபுரம் சென்றபோது, அவர்களில் ஒருவர் கனவில் சமயபுரத்தாள் இளம்பெண்ணாகத் தோன்றி வளையல் அணிவிக்கச் சொன்னாள். அவரும் அகமகிழ்ந்து வளையல் அணிவிக்க முயன்றார்.

ஆனால், வளையல்கள் உடைந்தனவே தவிர அணிவிக்க முடியவில்லை. உடனே கனவு கலைந்தது. கனவில் உடைந்த வளையல்கள், நிஜத்திலும் உடைந்திருந்தது பார்த்து திகைத்தார். அவர் உடன் வந்தோருக்கெல்லாம் அம்மை நோயும் கண்டிருந்தது. ஒன்றுமே புரியாமல் குழம்பியிருந்தபோது, ஆகாயத்தில் காட்சி தந்தாள் அன்னை.

வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்தை விட்டு ஆகாய மார்க்கமாய் அவர்கள் ஊருக்கு வருவதாக அன்னை உறுதி கூறினாள். அவ்வண்ணமே ஆண்டுதோறும் இந்த தினத்தில், சமயபுரத்தாள், அலங்காரவல்லியாக காட்சி தருகிறாள். நல்ல கணவன் அமைய வேண்டி கன்னிப்பெண்கள் இந்த அன்னையைத் துதிக்கிறார்கள். கும்பகோணம் – பூந்தோட்டம் வழியில் 24 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

The post வில்லியனூர் ஸ்ரீகோகிலாம்பிகை appeared first on Dinakaran.

Related Stories: