பர்கூர் மலைக்கிராமங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு: குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை

 

ஈரோடு,மே25: ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைக் கிராமங்களில் அரசின் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பர்கூர் மலைக்கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேற்று அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாச்சலம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், பர்கூர் சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும், பர்கூர் வன சரகம் பழங்குடி மலைவாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், அதேபகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியினையும், ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொண்டார்.

ஊசி மலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்கப்பட உள்ள இடத்தினையும், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிக்கு செல்வதற்கான கான்கிரீட் தளம் அமையவுள்ள இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

The post பர்கூர் மலைக்கிராமங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு: குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: