கிருஷ்ணகிரி, மே 25: கிருஷ்ணகிரியில் விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்ளிகளில் சேர்க்கைக்கான தேர்வு போட்டி நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்ளிகளில், 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில், 2023- 24ம் ஆண்டிற்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டிற்கு தேர்வு போட்டிகள் நடந்தது. இப்போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பாபு துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில், 147 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் செய்திருந்தார். மேலும் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட அளவில் தேர்வாகும் மாணவ, மாணவியர், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
The post விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு போட்டி appeared first on Dinakaran.