ஓசூர், மே 25: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் குவியல், குவியலாக தொடர்ந்து நுரை வெளியேறுவதால் ஆற்றிலும் பனிக்கட்டிகள் போல நுரை செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தென்பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகிறது. வரத்தூர் ஏரி வழியாக பெங்களூரு மாநகரத்தின் கழிவுநீர் கலந்தும், தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்தும், தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருநிறத்தில் நீர் வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 509 கனஅடியாக இருந்தது. இதையடுத்து, அணையில் இருந்து 6 மதகுகள் வழியாக 640 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், ஆற்றில் வெளியேற்றப்படுவது நீரில், 2 அடி உயரத்திற்கு நுரை பொங்கி காட்சியளிக்கிறது. கடும் துர்நாற்றத்துடன் கருநிறத்திலும், ரசாயன நுரை பனிக்கட்டி போல் பெருக்கெடுத்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், 42.64 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
The post கெலவரப்பள்ளி அணையில் 2வது நாளாக வெளியேறும் நுரை appeared first on Dinakaran.