நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் விசாரணை; இரு விரல் பரிசோதனை நடந்ததாக ஆதாரம் இல்லை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி

சிதம்பரம்: சிதம்பரத்தில் பெண் குழந்தைகளிடம் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டியில் கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனையில் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். இந்நிலையில் கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பினர்கள் இளங்கோவன், பெனிட்டா, முகுந்தன், செந்தில் ஆகிய 5 பேர் குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேற்று சிதம்பரம் வந்து தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்பி ராஜாராம், ஆட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள், அவர்களது பெற்றோரிடம் நேரில் சென்று தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார்.

பின்னர் ஆணைய உறுப்பினர் கூறுகையில், ‘சிறார் திருமண வழக்கு என்ற பெயரில் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். இதனை தானாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கணுங்கோ, தலைமை செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தலைமை செயலரிடமிருந்து அறிக்கை வந்துவிட்டது. அந்த அறிக்கை சரியா என்பது பற்றி 3 கட்டமாக விசாரித்தேன். விசாரணை அறிக்கையை ஆணைய தலைவரிடம் அளிக்க உள்ளேன். தீட்சிதர்கள், சிறுமியிடம் விசாரணை செய்தபோது குழந்தை திருமணம் நடைபெறவில்லை. எங்களை வற்புறுத்தியதால் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக்கொண்டோம் என கூறினர். இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை’ என்றார்.

The post நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் விசாரணை; இரு விரல் பரிசோதனை நடந்ததாக ஆதாரம் இல்லை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: