ஆன்மிகம் பிட்ஸ்: அறச்சலூர் அறச்சாலை அம்மன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அறச்சலூர் – அறச்சாலை அம்மன்

அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர் அம்மன் என்று பெயர் வந்தது. கம்பீரமான குதிரைகளுக்கு மத்தியில் எண்கரங்களோடு சூரனை வதம் செய்த கையோடு வீற்றிருக்கிறாள். ஜாதகப் பொருத்தமே இல்லை என்றாலும்கூட இந்த அம்மனின் உத்தரவு இருந்தால் போதும் என்கிறார்கள். பூ போட்டு வாக்கு கேட்கிறார்கள். வெள்ளை நிற பூக்கள் மூன்றும், சிவப்பு நிற பூக்கள் மூன்றும் பயன்படுத்துவர்.

சிவப்பு பூ வந்தால் சுப விசேஷங்கள் நிறைவேறும் என்றும், வெள்ளை நிற பூக்கள் வந்தால் வீடு மனை நிலம் வாங்கலாம் என்பதாக அம்மன் உத்தரவிடுகிறாள். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபட்டு அம்மனுக்கே அதை காணிக்கையாக தருகிறார்கள். ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 24 கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது.

சாகம்பரி தேவி மந்திர்

சாகம்பரி தேவியின் திருக்கோயில் ஷகரான்பூரில் அமைந்துள்ளது. இரண்டு மலைக் குன்றுகளுக்கு நடுவில் பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ஆயிரக் கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். ஆண்டு தோறும் ஆச்வின மாதத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவின் போது இந்தப் பிரதேசத்தில் விளையும் ‘சாரல்’ என்ற பழம், பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இத்திருக்கோயிலில் குடிகொண்டுள்ள ஸ்ரீசாகம்பரி தேவி, மிகவும் கருணை மிக்கவள். தன்னை பக்தியுடன் அணுகுவோர்க்கு வேண்டியதனைத்தையும் தருபவள். நாமும் சென்று அவளை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

ஒருவந்தூர் – பிடாரி செல்லாண்டியம்மன்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த நிலம் முழுக்க உப்பு மண்ணாக இருந்திருக்கிறது. உப்பு மண்ணை வெட்டியபடியே இருக்க, ‘ணங்…ணங்’ என்று சத்தம் கேட்டது. ஓசை வந்த இடத்தில் தோண்டிப்பார்க்க குருதி பொங்க அன்னையின் சிலை இருந்தது. ஈசனும், அம்மையும் சேர்ந்து அருள்புரியும் மூர்த்தமாக இருந்ததால் ஒருவந்தூர் என்றானது. பக்தர்கள் பிடாரி செல்லாண்டியம்மன் என்று திருப்பெயரிட்டு அழைத்தனர். பார்வதி தேவி பூஜை செய்வது போன்ற அமைப்பில் சிற்பம் ஒன்று இங்கு உள்ளது. மாசி மக நட்சத்திரத்தில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும்.

தினந்தோறும் கோயிலைச் சேர்ந்த வேலும், பூஜைப் பொருட்களும் மேளதாளத்தோடு எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோயிலை அடைகிறது.திருமண வரம் வேண்டி பெண்கள் இத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். விரைவிலேயே தம்பதியராக வந்து கைக்கூப்பி வணங்கவும் செய்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், மோகனூர் – காட்டுப்புத்தூர் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: அருள் ஜோதி

The post ஆன்மிகம் பிட்ஸ்: அறச்சலூர் அறச்சாலை அம்மன் appeared first on Dinakaran.

Related Stories: