காவல் தெய்வம் கருப்பண்ணசாமி

‘‘லவன் குசன்’’ என்று ராமபிரானுக்கு இரண்டு புதல்வர்கள் உண்டு என்பர். சீதா பிராட்டி ‘லவனை’ மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனைப் பார்த்துக் கொள்ளுமாறு, வால்மீகி முனிவரிடம் கூறி விட்டுச் சென்றவள், உடனே திரும்பி வந்து லவனை தூக்கிச் சென்று பர்ண சாலைக்கு வெளியே உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், தொட்டிலில் குழந்தையைக் காணாது திகைத்தார்.

குழந்தையைக் காணாவிட்டால் சீதை சபித்து விடுவாளே என்று அஞ்சிய வால்மீகி முனிவர், தர்ப்பைப் புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனைப் போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். அவனுக்கு ‘குசன்’ என்று பெயரிட்டு, மகிழ்ந்தார். இதை அறிந்த சீதை மகிழ்ச்சியுடன், குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து இருபிள்ளைகளையும் தன்பிள்ளைகளாகவே வளர்த்தாள். ராமபிரான் கானகம் வந்து சீதையிடம் ‘எது நம் குழந்தை’ என்று கேட்கிறார்.

இரண்டு குழந்ைதகளும் ஒரே மாதிரியாக இருந்ததால், உடனே இருவருடன் தீக்குளித்த சீதை, லவனும் குசனும் தீக்குளிக்க, லவன் மட்டும் பிழைத்து வர, குசன் மட்டும் தீயில் கருகினான். ஏனென்றால் அவன் தர்ப்பைப் புல்லால் உயிர் பெற்றவன் அல்லவா! காருண்ய மூர்த்தியான ராமபிரான், குசனுக்கு உயிர் தந்து காப்பாற்றினார். குசன், தீயில் கருகியதால் அவனை ‘கருப்பா’ என்று அழைத்தாராம். அது முதல் அவர்தான் “கருப்பண்ண சாமி’’ ஆனார் என்ற ஒரு கதை காலங்காலமாக செவிவழிச் செய்தியாக சொல்லப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த கருப்பண்ணசாமி தெய்வமாக பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறார். அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அரிவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும், வேகமான ஓட்டமும், துடிப்பான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பிக்கை துரோகிகளுக்கு கடும் தண்டனை அளிப்பார்.

தன்னை நம்பியவருக்குக் காவலாகவும் எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும்இருப்பவர், இந்தக் கருப்பண்ணசாமி. நாடெங்குமுள்ள கிராமங்கள் தோறும் அருள்பாலிக்கும் கருப்பண்ணசாமிக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கிறார்கள். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி, மேள தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பொது மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு, மனை வளமான வாழ்க்கை போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே ‘காவல் தெய்வம்’ என்ற நம்பிக்கையுடன் போற்றி வழிபடுகிறார்கள். இவருக்கு உயிர்ப்பலி இடுவதும் வழக்கத்தில் உள்ளது. கருமை நிறக் கண்ணாபரமாத்மாவின் அம்சம் கருப்பண்ணசாமி என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் மிகுந்து காணப்படுகிறது.

எதிரிபயம் நீங்கவும், கொலை, களவு ஏற்படாமல் இருக்கவும் இவரே கதி என்று வழிபடுகின்றனர். கருப்பரும், தன்னை வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவல் தெய்வமாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார். கருப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலிக்கருப்பன், குலகருப்பன், பதினெட்டாம் படி கருப்பன், பெரிய கருப்புசாமி, சின்ன கருப்பு சாமி, தேரடி கருப்பு, பனையடி கருப்பு, நாவலடி கருப்பு, நொண்டிக் கருப்பன், ஒண்டிக் கருப்பன் என்று பல பெயர்களில் காவல் தெய்வம் கருப்பண்ணாசாமி, வழிபாட்டுக் குரியவராகத் திகழ்கிறார்.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post காவல் தெய்வம் கருப்பண்ணசாமி appeared first on Dinakaran.

Related Stories: