குடியரசுத் தலைவரை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டது: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காமல் பிரதமர் கட்டடத்தை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. திரிணாமுல், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, திமுக, வி.சி.க., சிவசேனா (உத்தவ்), இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதிமுக ஆகிய கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கின்றன.

சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரளா காங்கிரஸ் (மாணி), ஐக்கிய ஜனதாதளம், தேசிய மாநாட்டுக் கட்சி புறக்கணிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் விழாவை புறக்கணிக்கின்றன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறப்பதை கண்டித்து விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன. மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குடியரசுத் தலைவரை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டதாகவும், மோடியின் சர்வாதிகார போக்கை கண்டித்து விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

பிரதமர் மோடி தொடர்ந்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. கொரோனா பரவலால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் பெரும் பொருட் செலவில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் கருத்தை அறிய எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரை அழைக்காமல் நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல். நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது கண்டிக்கத்தக்கது. குடியரசுத் தலைவரை வைத்தே நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஜனநாயகத்தை அச்சுறுத்தும் மோடி அரசை கண்டிக்கவே வேறுபாடுகளை களைந்து ஓரணியில் திரண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி பிரதமர் மோடியே நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பார் என பாஜக கூறி வருகிறது.

The post குடியரசுத் தலைவரை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டது: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: