பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட மீன்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சென்னை, மே 24: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில், பொது மக்களால் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான ஒரு கலைப் படைப்பு நிறுவப்பட்டுள்ளது, பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது நிலத்தில் மட்டுமல்ல, அது கடல்கள் மற்றும் நீர்நிலைகளுக்குச் சென்று கடல்வாழ் உயிரினங்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில், கடற்கரைகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும், கடலில் பிளாஸ்டிக் கலப்பதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளால் வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்பு ஒன்றை அதிகாரிகள் நிறுவியுள்ளனர்.
இந்த கலை படைப்பு ஒரு பெரிய மீனை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், மீன்கள் இனம் பாதிக்கப்படுவதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கலை படைப்பு கடந்த 21ம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்னதாக அமைக்கப்பட்டது. இது 3வது ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டத்துடன் ஒத்துப்போகிறது. இந்த கலை படைப்பு கடற்கரைக்கு வரும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த கலைப் படைப்பு நிறுவப்பட்டதன் வீடியோவை, சுப்ரியா சாஹு ஐஏஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கடற்கரையை தூய்மை செய்யும் திட்டத்தை (மெகா பீச் கிளீன் அப் திட்டம்) குறிக்கும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில், கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட இந்த கலை படைப்பை நாங்கள் அமைத்துள்ளோம். இது நமது பெருங்கடல்களில் மாசுபாட்டின் சோகமான யதார்த்தத்தை சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல், கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கையையும் எழுப்புகிறது,” என்று பதிவிட்டிருந்தார். இதில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர், “நமது கடலில் பிளாஸ்டிக்கை கொட்டுவதைத் தடுக்க அதிக விழிப்புணர்வும், நடவடிக்கையும் தேவை,” என்று பதிவிட்டுள்ளார்.

The post பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட மீன்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: