புளி குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி, மே 24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் மெகா புளி குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார், 30 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணகிரி பழையபேட்டையில் புளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சந்தை கூடும். கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி மார்கெட் தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் புளி வரத்து இருக்கும். இங்கிருந்து தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பபடுகிறது. ஆனால் புளி சந்தைக்கென தனி இடமோ, மார்கெட்டோ இல்லாமல், சாலையோரத்திலேயே அடுக்கி வைக்கப்படுகின்றன. மேலும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான டன் புளிகள் வரும் கிருஷ்ணகிரியில், புளி குளிர்பதன கிடங்கு போதுமானதாக இல்லை.

இதுகுறித்து புளி விவசாயிகள், வியாபாரிகள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் புளி குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் போச்சம்பள்ளியில் 75 மெட்ரிக் டன், கிருஷ்ணகிரியில் 25 மெட்ரிக்டன், ஓசூரில் 700 மெட்ரிக் டன், இராயக்கோட்டையில், 180 மெட்ரிக் டன், ஆலப்பட்டியில் 25 மெட்ரிக் டன், காமன்தொட்டியில் 50 மெட்ரிக் டன், காவேரிப்பட்டணத்தில் 25 மெட்ரிக் டன் மற்றும் தேன்கனிக்கோட்டையில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் முதன்மை பதப்படுத்தும் நிலைய குளிர்பதன கிடங்குகளும், கிருஷ்ணகிரியில் 25 மெட்ரிக் டன், போச்சம்பள்ளியில் 25 மெட்ரிக் டன், ஓசூரில், 50 மெட்ரிக் டன், ஊத்தங்கரையில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக குளிர்பதனக் கிடங்குகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் ஆறு மாதங்கள் இந்த அரசு குளிர்பதன கிடங்குகளில் புளியை இருப்பு வைக்க, குவிண்டாலுக்கு ₹260 மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து புளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அவைகளை இருப்பு வைப்பதற்கு போதிய அளவில் குளிர்பதன கிடங்குகள் அதாவது குடோன்கள் இல்லாததால், முறையாக அவைகளை பாதுகாக்க இயலாத சூழல் நிலவுகிறது. தற்போதும், 25ஆயிரம் டன் அளவிற்கு புளி இருப்பு உள்ள சூழலிலும் அவைகளை பாதுகாக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆண்டுதோறும், 1,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணகிரி புளி சந்தையிலிருந்துதான் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களான சட்டீஸ்கர் உட்பட பல இடங்களுக்கு புளி செல்கிறது. கிருஷ்ணகிரியில் பல லட்சம் கிலோ அளவில் புளி வரத்து உள்ளது. ஆனால் புளி குளிர்பதன கிடங்கு மூலம், 1300 மெட்ரிக் டன் அளவில் மட்டுமே இருப்பு வைக்கும் சூழல் இருப்பதால், வியாபாரிகள் கிடைக்கும் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள்.

அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தை அமைக்க, 40 கடைகளுடன் புளி மார்கெட் வணிக வளாகம் மற்றும் 10ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு வைக்கும் அளவிற்கு, புளி குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புளி வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முந்தைய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அதற்கான கோப்புகளை தயார் செய்து, தமிழக அரசுக்கும் அனுப்பி வைத்தார். அடுத்தாண்டு ஜனவரியில் தொழில் முனைவோர் மாநாட்டிலேயே மெகா குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணிகளை, அரசே செயல்படுத்தும் என புளி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சரயு கூறுகையில், இது குறித்து நான் பொறுப்பேற்றவுடனேயே தகவல் தெரிவித்தனர். இது குறித்த கோப்புகளை பார்க்கவுள்ளேன். அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தமிழக அரசுக்கு மெகா புளி குளிர்பதன கிடங்குக்கு பரிந்துரை அனுப்பப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட புளி விவசாயிகள், வியாபாரிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்றார்.

The post புளி குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: