இலவச வேட்டி சேலை உற்பத்தி அடுத்த மாதம் துவங்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

 

ஈரோடு, மே 23: இலவச வேட்டி சேலை உற்பத்தியை அடுத்த மாதம் தொடங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளி தொழிலில் விசைத்தறி தொழில் பெரும் பங்கு வகித்து வருகிறது. 6 லட்சத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளும் அதனை சார்ந்து நேரடியாக மறைமுகமாகவும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி தொழில் மிகவும் மோசமடைந்து குறிப்பாக நூல் விலை ஏற்றம் இறக்கம் காரணமாக விசைத்தறிகள் விற்பனைக்கு மற்றும் உடைக்கப்பட்டு இரும்பு வியாபாரத்திற்கும் சென்று கொண்டிருந்த நிலையில், தமிழக அரசு நூல் விலை கட்டுப்பாடு தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியதன் பயனாக தற்போது நூல் விலை நிலையாக உள்ளது. விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தி போன்றவை தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இலவச மின்சாரம் 750 லிருந்து 1000 யூனிட் ஆக வழங்கியும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை பாதியாக குறைத்தும் விசைத்தறியாளர்களின் வாழ்வில் விளக்கேற்றிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்திற்கான உற்பத்தியை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க நூல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post இலவச வேட்டி சேலை உற்பத்தி அடுத்த மாதம் துவங்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: