கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரி ரயில் நிலையத்தில் பயணிகள் உண்ணாவிரதம்

சென்னை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள், மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் மூலமாக சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு ரயில் வருவதற்கு முன்பாகவே பயணிகள் அங்கு அதிக அளவில் காத்திருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து, மதுராந்தகத்தில் ஏறும் பயணிகள் நிற்கக்கூட இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்வது தினந்தோறும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, மதுராந்தகத்தில் தற்போது நின்று செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். இது மட்டுமின்றி, மேலும் சில ரயில்களை காலை, மாலை நேரங்களில் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதுராந்தகம் ரயில் நிலையம் அருகே பயணிகள் மற்றும் மதுராந்தகம் நகர பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ரயில் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத்தில் ஈடுபட்ட பயணிகள் கூறுகையில், ‘நாங்கள் நீண்ட காலமாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரி ரயில் நிலையத்தில் பயணிகள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: