சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில், கோடை வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இது, சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் குரங்கு, முதலை, நரி, ஈமு கோழி, தீக்கோழி, ஆமை, மான், பாம்பு என 500க்கும் மேற்பட்ட வன விலங்குகள், மயில், கொக்கு, நாரை, கிளிகள் என 300க்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பார்வையாளர்களும் வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் பொதுமக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
சென்னையில் தற்போது வெயிலின் அகோரம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பறவைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு நட வடிக்கைகளை பூங்காவில் உள்ள வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். குறிப்பாக வெயிலினால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உடல் அலர்ஜி ஏற்படாத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தினமும் காலை அனைத்து பறவைகளின் மீதும், கூடுகளின் மீதும் விலங்கினங்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஊழியர்கள் உடலை குளிரச் செய்கின்றனர். இதுமட்டுமல்லாமல் வெயில் காலத்துக்கு ஏற்ற தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் தீ பரவாமல் இருக்க காய்ந்த மரங்களின் செடிகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. சில விலங்குகள் கோடை வெப்பத்தை தாங்கும் வகையில் சிறப்பு கூண்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் விலங்கியல் பூங்காவிலும் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ஷவர் மூலம் யானைகளுக்கு குளியலும், மலைப்பாம்புகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விலங்கினங்களின் கூண்டுகளின் மீது தண்ணீரை தெளிப்பதுடன் நீர்சத்து உள்ள பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் appeared first on Dinakaran.