கிருஷ்ணகிரி, மே 22: களைச் செடிகளை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையைக் கொண்டு விவசாயிகள் மண்ணின் வளத்தை மேம்படுத்த கோடை உழவுப் பணிகளை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், முட்டைகள் அழிக்கப்படுவதுடன், பல நோய் காரணிகளுக்கு துணையாக உள்ள களைச் செடிகளும், அதன் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகிறது.
கோடை உழவினால் மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதுடன், நன்மை செய்யும் நுண் உயிரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் கோடை மழை நீர் வழிந்தோடாமல் வயலில் தேங்கி நிற்க உதவுகிறது. மண்ணின் இறுக்கம் தளர்ந்து இலகுவாக மாறும். எனவே, கோடையில் பெய்யும் மழையைக் கொண்டு, கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெணுணு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
The post களைச் செடிகளை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.